Posted in

நீலாங்கரையில் இருந்து போயஸ் கார்டனுக்குக் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்– இதுதான் காரணமா?

தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், தற்போது வசித்து வரும் நீலாங்கரை இல்லத்திலிருந்து போயஸ் கார்டன் பகுதிக்குத் தனது இருப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

தற்போது முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் இருந்து நாள்தோறும் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்தே தலைமைச் செயலகத்திற்கு வருகை தருகிறார். முதலமைச்சரின் பாதுகாப்புக் காரணங்களுக்காக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும்போது, கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) மற்றும் நகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தத் தினசரிப் பயண நேரத்தைக் குறைக்கவும், பொதுமக்கள் சந்திக்கும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவுமே போயஸ் கார்டன் பகுதிக்குக் குடியேற அவர் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

போயஸ் கார்டன் பகுதி ஏற்கனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ இல்லம் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் மையமாகத் திகழ்ந்த ஒன்றாகும். சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள போயஸ் கார்டனில் இருந்து தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மிக விரைவாகச் சென்று வர முடியும் என்பதால், நிர்வாகச் சக்கரத்தைச் சுலபமாகச் சுழற்ற இது ஏதுவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இருப்பினும், போயஸ் கார்டனில் புதிய இல்லம் வாங்குவது அல்லது அரசு இல்லத்தைப் பயன்படுத்துவது குறித்து முதலமைச்சரின் அதிகாரப்பூர்வத் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. எதுஎவ்வாறாயினும், தமிழக அரசியல் வரலாற்றில் நீலாங்கரை டூ போயஸ் கார்டன் இடையேயான இந்த இருப்பிட மாற்ற விவாதம் மக்கள் மத்தியில் மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.