தென்கொரியாவில் நடைபெற்ற மதிப்புமிக்க ‘கொரியா மாஸ்டர்ஸ் 2026’ சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் இளம் வீராங்கனை அஷ்மிதா சலிஹா முதன்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை ஹான் சியான் சியை (Han Qian Xi) வீழ்த்தி அவர் இந்த மகத்தான வெற்றியைத் தன்வசமாக்கியுள்ளார்.
இறுதிப்போட்டியின் தொடக்கத்தில் முதல் செட்டை 14-21 என்ற புள்ளிக் கணக்கில் இழந்த போதிலும், அஷ்மிதா சலிஹா அபாரமான மனஉறுதியுடன் மீண்டு வந்தார். சீரான தாக்குதல் ஆட்டம் மற்றும் துல்லியமான கோர்ட் கவரேஜ் மூலம் எதிரணி வீராங்கனையைத் திணறடித்த அஷ்மிதா, 14-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றுத் தனது முதலாவது பிடபிள்யூஎஃப் (BWF) வேர்ல்ட் டூர் பட்டத்தைக் தட்டிச் சென்றார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான அஷ்மிதா சலிஹா, வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார். காயத்திலிருந்து மீண்டு வந்து களமிறங்கிய அவர், இத்தொடரின் காலிறுதியில் ஜப்பானின் முதல் நிலை வீராங்கனை ஹினா அகேச்சியையும், அரைஇறுதியில் சக இந்திய வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள அஷ்மிதா சலிஹாவிற்கு விளையாட்டு உலகினர், இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI) மற்றும் ரசிகர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, வரும் சர்வதேசத் தொடர்களில் பங்கேற்க இருக்கும் இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கு பெரும் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.