Posted in

நடுவானில் அவசர வழியைத் திறக்க முயற்சி! – மலேசிய விமானத்தில் ரகளை செய்த பயணி!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கேரளா மாநிலம் கொச்சிக்கு வந்து கொண்டிருந்த பாட்டிக் ஏர் (Batik Air OD231) பயணிகள் விமானத்தில், பயணி ஒருவர் நடுவானில் திடீரென அவசர கால வெளியேறும் கதவைத் திறக்க முயன்ற சம்பவம் பெரும் பரப்பரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஜம்ஷீர் அதானிக்கல் (36) என்ற அந்தப் பயணி, விமானம் பறந்து கொண்டிருந்த போது அவசரக் கதவின் கண்ணாடி பேனலை உதைத்துச் சேதப்படுத்தியதுடன், கதவைத் திறக்கவும் முயற்சித்துள்ளார்.

விமானப் பணிப்பெண்கள் மற்றும் சக பயணிகள் உடனடியாகத் தலையிட்டு அவரைத் தடுத்து நிறுத்தி, இருக்கையில் கட்டிப்போட்டுப் பலவந்தமாகக் கட்டுப்படுத்தினர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் நல்வாய்ப்பாகக் காப்பாற்றப்பட்டது. “விமானத்தில் பயணித்த போது தனக்குச் சாக வேண்டும் போல் தோன்றியதால் இவ்வாறு செய்தேன்” என்று முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்துள்ளதாகக் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரால் (CISF) பிடிபட்ட அவர், பின்னர் நெடும்பாசேரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். சக பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும், விமானப் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும் அவர் மீது கொலை முயற்சி உட்படப் பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் பணிபுரிந்து வந்த அவர், தனது புதுப்பிறந்த குழந்தையைப் பார்ப்பதற்காகக் கேரளா திரும்பிய போது இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். விமானத்தின் அவசரக் கதவுப் பேனல் சீரமைக்கப்பட்ட பின்னர் அந்த விமானம் மீண்டும் தனது சேவையைத் தொடர்ந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரின் மனநலம் குறித்து விசாரணை நடத்தக் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.