தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க மனிதர்களை விட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களையே இளம் தலைமுறையினர் அதிகம் நம்புவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட புதிய பிரம்மாண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் 11 முதல் 24 வயது வரையிலான 4,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடையே ‘பப்ளிக் ஃபர்ஸ்ட்’ (Public First) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், சுமார் 87 சதவீதம் பேர் ஏதேனும் ஒரு வகையில் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதில் 47 சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட பாதிப் பேர், ஒரு தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய மனித வழிகாட்டிகளை விட ஏஐ செயலிகளையே அதிகம் நம்புவதாகக் கூறியுள்ளனர்.
மேலும், பள்ளி மாணவர்களில் 63 சதவீதம் பேர் தங்களது வீட்டுப் பாடங்களுக்கும், 77 சதவீதம் பேர் கடினமான பாடப் பிரிவுகளைப் புரிந்து கொள்வதற்கும் ஏஐ தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியினால் தங்களின் பாடசாலை கல்விக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக 42 சதவீத இளைஞர்கள் கருதுவதுடன், 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தங்களது பள்ளி மற்றும் கல்லூரிகள் தங்களை எதிர்கால ஏஐ உலகிற்குத் தயார்படுத்துவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர் சர் அந்தோணி செல்டன் மற்றும் தொழில்முனைவோர் டிம் பண்டிங் இணைந்து தயாரித்துள்ள இந்த அறிக்கையில், “கல்வி நிறுவனங்கள் ஏஐ இல்லாத பழைய உலகத்திற்கான கல்வியையே இப்போதும் கற்பித்து வருகின்றன” எனக் எச்சரித்துள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தைப் பள்ளிகளில் முறையாகப் பயன்படுத்தப் பயிற்சி அளிக்கத் தவறினால் கல்வி நிறுவனங்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடும் என்றும், இதற்காக அரசுகள் உடனடியாகச் சிறப்பு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.