துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டின் வான்வழி ஏவுகணைத் தாக்குதல் மற்றும் படுகொலை அச்சுறுத்தல் காரணமாக, விமான நிலைய உணவுக் காரில் (Catering Truck) மறைந்து சென்று ரகசியமாக மாற்று ராணுவ விமானத்தில் தப்பிச் சென்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழ்களான ‘வாஷிங்டன் போஸ்ட்’ மற்றும் ‘நியூயார்க் டைம்ஸ்’ ஆகியவை இந்த ரகசிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்த செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் துருக்கி தலைநகர் அன்காராவில் இருந்து புறப்பட்ட போது இந்தத் தந்திரமான பாதுகாப்பு நடவடிக்கை (Deception Operation) மேற்கொள்ளப்பட்டது. நிருபர்கள் மற்றும் ஊடகக் கேமராக்களுக்கு முன்பாக அதிபர் டிரம்ப் வழக்கம் போல ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) அதிபர் விமானத்தில் ஏறியுள்ளார். ஆனால், கேமராக்களின் கண்ணில் படாதவாறு விமானத்தின் மற்றொரு கதவு வழியாக, உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல பயன்படும் ஹைட்ராலிக் டிரக் உயர்த்தப்பட்டு, அதன் மூலம் டிரம்ப் மற்றும் அவரது முக்கிய அதிகாரிகள் ரகசியமாக வெளியேற்றப்பட்டு அருகே தயாராக இருந்த சிறிய ‘சி-32ஏ’ (C-32A) ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டனர்.
அதிபர் டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில்தான் பயணிக்கிறார் என்று ஊடகவியலாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்களை நம்ப வைப்பதற்காக, போலி விமானப் பயணம் திட்டமிடப்பட்டது. டிரம்ப் பயணிப்பதாக நம்பப்பட்ட ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த நிருபர்கள் மற்றும் ஊழியர்களிடம் விமானத்தின் ஜன்னல் திரைகளை முழுமையாக மூடுமாறு அமெரிக்க ரகசிய சேவை (Secret Service) அதிகாரிகள் உத்தரவிட்டனர். இரண்டு விமானங்களும் இங்கிலாந்திலுள்ள ‘ஆர்டிஎஃப் மில்டன்ஹால்’ (RAF Mildenhall) விமானப் படைத் தளத்திற்குச் சென்றடைந்த நிலையில், அங்கு டிரம்ப் மீண்டும் பழைய விமானத்திற்கு மாறி வழக்கம்போல கேமராக்களுக்கு முன்னால் இறங்கி வந்தார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், டிரம்பின் உயிரைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த ரகசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய அதிபர் பில் கிளிண்டன் பாகிஸ்தான் சென்றபோதும் இதுபோன்ற போலி விமான உத்தி பயன்படுத்தப்பட்ட போதிலும், அதிபர் ஒருவர் உணவுக் காரில் மாற்றப்பட்டு ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.