Posted in

ஃபோன வச்சுட்டு ஆளே காணோம்! – நடிகை வைஷாலியின் மின் கட்டண புகாருக்கு மின்வாரியம் பரபரப்பு விளக்கம்!

தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளதாகக் கூறி சின்னத்திரை நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அது குறித்துத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) விரிவான விளக்கம் அளித்துள்ளது. “புகார் தொடர்பாக ஆய்வு செய்ய நடிகை வைஷாலியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது, தகவல்களைத் தருவதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தவர், அதன்பின் அழைப்புகளை ஏற்காமல் தலைமறைவாகிவிட்டார்” என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நடிகை வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், கடந்த இரண்டு மூன்று மாதங்களாகப் பொதுமக்களுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிக மின்கட்டணம் வந்து கொண்டிருப்பதாகக் வேதனை தெரிவித்திருந்தார். மேலும், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தால் பயனேதுமில்லை எனக் குறிப்பிட்ட அவர், பழைய முறையிலேயே மின்சாரக் கட்டணக் கணக்கீட்டை மேற்கொள்ளலாம் என்றும், இதுபோன்ற சம்பவங்களால் அரசின் மீதான நம்பிக்கை குறைகிறது என்றும் காரசாரமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியதைத் தொடர்ந்து, உண்மைத் தன்மையைச் சரிபார்க்க மின்வாரிய சிறப்பு அதிகாரிகள் குழு நடிகை வைஷாலியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரணை நடத்தியது. அப்போது, அவரது மின் இணைப்பு எண் மற்றும் முகவரியைக் கேட்டறிந்து நேரடியாக ஆய்வு செய்ய முயன்றபோது, விவரங்களை அனுப்பி வைப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவர், அதன் பின்னர் மின்வாரிய அதிகாரிகள் பலமுறை தொடர்புகொண்டும் அழைப்பை ஏற்கவே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்சார வாரியம், மாநிலம் முழுவதும் கணக்கீட்டில் முறைகேடுகள் உள்ளதா என 3.74 லட்சம் மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டதில் 0.75% மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருவதாகவும், கோடைக்காலத்தில் மின் பயன்பாடு அதிகரித்ததே தவிரக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், தவறான வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.