Posted in

உக்ரைன் முதல் காசா வரை: மனித குலத்தின் பழங்கால வரலாற்று அடையாளங்களை அழிக்கும் நவீன போர்கள்!

நவீன காலத்தில் நடைபெறும் கொடூரமான போர்கள் வெறும் மனித உயிர்களை மட்டும் பறிக்காமல், மனித சமுதாயம் பல நூற்றாண்டுகளாகப் போற்றிப் பாதுகாத்து வந்த வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளங்களையும் முற்றிலுமாக அழித்து வருகின்றன. உக்ரைன் முதல் காசா முனை வரை தொடர்ந்து வரும் தீவிர மோதல்களில், பழங்காலத் திருச்சபைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதிகள், தொல்லியல் அருங்காட்சியகங்கள் மற்றும் பல நூறாண்டு பழமையான ஆவணக்காப்பகங்கள் ஏவுகணைத் தாக்குதல்களாலும் குண்டுவீச்சுகளாலும் தரையோடு மட்டமாக்கப்பட்டு வருவதை பன்னாட்டு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் இதுவரை 500-க்கும் மேற்பட்ட வரலாற்று கட்டிடங்கள், தேவாலயங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. தலைநகர் கெய்வ் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘பெச்செர்ஸ்க் லாவ்ரா’ தேவாலய வளாகம் மற்றும் ஒடேசா அருங்காட்சியகம் போன்றவை தாக்கப்பட்டதன் மூலம், உக்ரைனின் சுயாதீன வரலாற்று அடையாளங்களை அழிக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக சர்வதேச வரலாற்று அறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேபோல், காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர ராணுவ நடவடிக்கைகளின் காரணமாக அப்பகுதியின் 80 சதவீதத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் அழிந்து வெறும் இடிபாடுகளாக மாறியுள்ளன. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித போர்பிரியஸ் தேவாலயம், இடைக்காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அல்-ஒமாரி பெரிய மசூதி, தொன்மையான ஆவணக்காப்பகங்கள் மற்றும் அரிய கலைப்பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்துகின்றன.

போர் முனைகளில் ஏவப்படும் அதிநவீன ஏவுகணைகளும், கட்டுப்பாடற்ற குண்டுவீச்சுகளும் ஒரு நாட்டின் நிலப்பரப்பை மட்டும் சிதைக்காமல், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மனித நாகரிகத்தைக் கொண்டு சேர்க்கும் முதன்மைச் சான்றுகளையே அழித்து வருகின்றன. ஜெனீவா ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச விதிகளின்படி வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது கட்டாயம் என்ற போதிலும், வல்லரசு நாடுகளின் போர்ப் பதற்றத்தால் உலகப் பாரம்பரியம் கேள்விக்குறியாகியுள்ளது.