தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் வழக்கறிஞருமான மகாலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி சிவசக்தி முன்னிலையில் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்மைப் பற்றி அவதூறாகவும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்த சூழலில் இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 509 (பெண்களின் கண்ணியத்தைக் குறைத்தல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் சவுக்கு சங்கர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்தது. இதனடிப்படையில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்து சில ஆண்டுகளாக எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களும் முழுமையாகக் கேட்கப்பட்ட பிறகே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக நீதிமன்றம் தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம் அவர் உடனடியாகச் சிறையில் அடைக்கப்படாமல் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமையும் என வழக்கறிஞர் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கியுள்ள 30 நாட்கள் அவகாசத்திற்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதே அடுத்தகட்ட நடவடிக்கை தெரியவரும்.