Posted in

CM விஜய்க்கு தேர்தல் ஆணையம் வைத்த செக்! உயர் நீதிமன்றத்தில் நடந்த திருப்பம்!

தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது எழுத்துப்பூர்வ வாதத்தைத் தாக்கல் செய்துள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை நிறுத்தி வைப்பது நிரந்தரமானது அல்ல என்றும், தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஆணையம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 151A-இன் படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அந்தத் தொகுதியை முழுமையாகக் காலியானதாகக் கருதி உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது என்றும் ஆணையம் தரப்பில் வாதாடப்பட்டது. இருப்பினும், பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளதால், மேல்முறையீட்டுக்கான அவகாசத்திற்குப் பிறகு சட்டப்படி முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளைக் சுட்டிக்காட்டி இடைத்தேர்தல் நடத்தத் தடை கோரப்பட்டிருந்தது. இந்த விசாரணையின் போது, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தொகுதிகளை வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், விரைவில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதேவேளையில், திருச்சி கிழக்குத் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்குத் தேர்தல் நடத்தக் கூடாது என திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தரப்பில் வாதாடப்பட்டது.

ஒவ்வொரு தொகுதிக்கும் மக்கள் பிரதிநிதி இருக்க வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதாகவும், தேர்தல் வழக்குகளை நீதிமன்றம் ஆறு மாத காலத்திற்குள் விரைந்து விசாரித்து முடித்தால் அதனை வரவேற்பதாகவும் ஆணையம் தெரிவித்தது. உயர் நீதிமன்றம் தேர்தல் வழக்குகளில் இறுதி முடிவெடுத்த பிறகு, திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது.