தமிழகத்தில் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆட்சி சாதனையா அல்லது சோதனையா என்ற விவாதம் தமிழக அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. புதிய அரசின் நிர்வாக முடுக்கம் மற்றும் தொழில் துறைக்கான அதிரடி நடவடிக்கைகளுக்கு இடையே, எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை முன்வைக்கும் கடுமையான விமர்சனங்களுக்கு நடுவே தவெக அரசு தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பொருளாதார மற்றும் தொழிற்துறை வளர்ச்சியில் தவெக அரசு காட்டி வரும் வேகம் முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘வெற்றித் தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ₹67,542 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதல் 100 நாட்களில் ஒட்டுமொத்தமாக ₹1.02 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு உருதிமொழிகளை ஈர்த்து, 1.2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம், மகளிருக்கான சிங்கப்பெண் சிறப்புப் படை, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி, மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்கம் வழங்கும் திட்டம் போன்றவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இருப்பினும், அனுபவமில்லாத அமைச்சர்களின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் சவால்களை எதிர்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் தவெக அரசுக்கு ஆரம்பகால சோதனைகளாக உருவெடுத்துள்ளன.
இதற்கிடையே, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மற்றும் மின்சார விநியோகச் சீர்கேடுகள் ஆகியவற்றைக் சுட்டிக்காட்டி பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இரண்டும் அரசைத் தொடர்ந்து முடக்கி வருகின்றன. விளம்பர அரசியலைத் தாண்டி, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் முதலீடுகளை முழுமையாகக் களத்தில் அமல்படுத்துவதே முதல்வர் விஜய் அரசின் அடுத்தகட்ட வெற்றிக்கு முக்கியச் சான்றாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.