Posted in

எப்ஸ்டீன் ரகசிய ஆவணங்களில் மாயமான மாடலிங் அழகி: புரோக்கர் மரணத்தால் நீடிக்கும் மர்மம்!

அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய தொழிலதிபரான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் (Jeffrey Epstein) ரகசிய பாலினக் கடத்தல் வழக்கில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய ஆவணங்களில் 11 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மாயமான ஜெர்மனியைச் சேர்ந்த ‘மிச்செல்’ (22) என்ற மாடலிங் அழகியின் பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015-ஆம் ஆண்டு தனது 22-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண், அதன் பிறகு என்ன ஆனார் என்றே தெரியாமல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

எப்ஸ்டீன் வழக்கில் விடுவிக்கப்பட்ட மின்னஞ்சல் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாடலிங் புரோக்கரான டேனியல் சியாட் (Daniel Siad) என்பவர், எப்ஸ்டீனுக்குப் பெண்களைப் பரிந்துரைத்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இதில் மிச்செலின் புகைப்படங்கள் மற்றும் அவரது உடல் அளவீடுகளை எப்ஸ்டீனுக்கு டேனியல் சியாட் அனுப்பி வைத்ததும், “இவரை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்” என அவர் குறிப்பிட்டிருந்த தகவலும் ஜெர்மன் புலனாய்வு ஊடகங்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் முக்கியச் சாட்சியாகவும் குற்றவாளியாகவும் பார்க்கப்பட்ட மாடலிங் முகவர் டேனியல் சியாட், பாரிஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது விசாரணையில் மிகப்பெரிய முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு அதிகாரிகளால் மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இவர், வாக்குமூலம் அளிப்பதற்கு முன்பே மரணமடைந்துள்ளது சர்வதேச அளவில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

காணாமல் போன மாடலிங் பெண் மிச்செலின் தாய், தனது மகள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும், இந்த சர்வதேசக் கடத்தல் கும்பலால் அவர் ஏதேனும் அசம்பாவிதத்திற்கு ஆளாகியிருக்கலாம் என்றும் அஞ்சுவதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீனுடன் தொடர்புடைய முக்கியப் நபர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருவது, இந்த சர்வதேசக் கடத்தல் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகளை மறைக்கும் முயற்சியோ என்ற கோணத்தில் தொடர்ந்து சந்தேகங்களை தீவிரப்படுத்தியுள்ளது.