Posted in

அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்!: பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் சர்ச்சைக்கு முதலமைச்சர் விஜய் வருத்தம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரைத் தவெக அமைச்சர் நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசிய விவகாரம் பெரும் காரசார விவாதத்தைத் தோற்றுவித்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் பேரவையிலேயே பகிரங்கமாக மன்னிப்பு கோரியது அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயரை “கருணாநிதி” என நேரடியாகக் குறிப்பிட்டு விமர்சித்துப் பேசினார். இதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மறைந்த தலைவர்களின் பெயர்களை அவையில் பயன்படுத்தும்போது பின்பற்றப்பட வேண்டிய மரபுகள் மீறப்பட்டதாகக் கூறி அவை நடவடிக்கைகளில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த விவாதத்தின் இடையே பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்திலேயே கலைஞர் அவர்களை வெறும் பெயரைக் கூறி அழைக்கக் கூடாது என்ற மரபு நிலைநிறுத்தப்பட்டது” எனச் சுட்டிக்காட்டி பேரவை கண்ணியத்தைப் பேண வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவையில் எழுந்த சூழலைச் சீர்செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட்டார்.

பேரவையில் 110-வது விதியின் கீழ் உரைநிகழ்த்த எழுந்த முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து, “உங்க தலைவரின் பெயரை அமைச்சர் குறிப்பிட்டுப் பேசியது தவறுதான்… அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறிப் பேரவை மரபைக் காத்தார். அமைச்சரின் தவறை மறைக்காமல் அவையிலேயே முதல்வர் மன்னிப்பு கோரிய இந்த ஜனநாயகப் பண்பு அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.