Posted in

200-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்.. நீண்ட போர் பணிக்குப் பின் வீரர்களுக்கு கிடைத்த நிம்மதி!

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் 260 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் ‘USS ஆபிரகாம் லிங்கன்’ போர்க்கப்பல் மற்றும் அதன் மாலுமிகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அமெரிக்க மத்தியக் கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், கப்பலில் இருந்த வீரர்களை நேரில் சந்தித்துப் பேசி, “வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான திறமையை இக்கப்பலின் மாலுமிகள் வெளிப்படுத்தியுள்ளனர்” எனப் பாராட்டியதுடன், அவர்களைத் தாய்நாட்டிற்குத் திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 9 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இப்போர்க்கப்பலின் வீரர்கள், கடும் மன உளைச்சல் மற்றும் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாகக் தகவல்கள் வெளியாகின. நீண்டகாலப் போர்ப்பணி காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் தாங்க முடியாமல், சில மாலுமிகள் கப்பலிலிருந்து கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இச்ச சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய தளபதி பிராட் கூப்பர், கப்பலில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக முன்னர் எழுந்த குறைபாடுகள் அனைத்தும் உடனடியாகச் சரிசெய்யப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இக்கப்பலின் மாலுமிகள் 200-க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தி, தங்களின் இணையற்ற கடமை உணர்ச்சியை நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் உடனான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில், நீண்டகாலமாகப் பணியாற்றி மன அழுத்தத்திற்கு ஆளான மாலுமிகளைக் கொண்ட ‘USS ஆபிரகாம் லிங்கன்’ கப்பலுக்குப் பதிலாக மற்றொரு போர்க்கப்பல் படை அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய இந்தக் நீண்டகால கடல்வழிப் போர் நடவடிக்கைக்குப் பின், அமெரிக்க மாலுமிகள் தாயகம் திரும்புவது இராணுவ வட்டாரங்களில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.