Posted in

ஸ்தம்பித்த M25 நெடுஞ்சாலை: இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து; இங்கிலாந்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

இங்கிலாந்தின் முதன்மை விரைவு நெடுஞ்சாலைகளில் ஒன்றான M25 மோட்டார்வேயில் (Surrey) இரண்டு கனரக சரக்கு லாரிகள் (HGVs) ஒன்றோடொன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. வியாழக்கிழமை காலை வேளையில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அந்த நெடுஞ்சாலையின் முக்கிய தடம் மூடப்பட்டுப் போக்குவரத்து வேறு பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டது.

இந்த மோதலின் காரணமாக, M25 நெடுஞ்சாலையின் சந்திப்புகள் 5 மற்றும் 6 (J5 – J6) இடையே உள்ள நான்கு தடங்களில் இரண்டு தடங்கள் உடனடியாக மூடப்பட்டன. இதன் விளைவாகச் சுமார் 6 மைல் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் 80 நிமிடங்களுக்கும் மேலானக் கடும் தாமதத்தையும் கடுமையானப் போக்குவரத்து நெரிசலையும் எதிர்கொள்ள நேரிட்டதாக Daily Star ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த ‘நேஷனல் ஹைவேஸ்’ (National Highways) ரோந்து அதிகாரிகளும் அவசர மீட்புக் குழுவினரும், சேதமடைந்த லாரிகளை அகற்றும் பணிகளிலும், சாலையில் சிதறிய பாகங்களைச் சீரமைக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவிகள் வழங்கப்பட்ட நிலையில், காயங்களின் தன்மை மற்றும் சிகிச்சை குறித்த விவரங்கள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் விபத்து மற்றும் நீண்டநேரத் தாமதம் காரணமாக, வேலைக்குச் செல்வோர் மற்றும் வணிக ரீதியாகப் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகினர். விபத்து நடந்த பகுதியைப் பொதுமக்கள் தவிர்க்குமாறும், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.