ஈரான் நாட்டின் மீது இதுவரை எந்தவொரு நாட்டின் மீதும் விதிக்கப்படாத அளவுக்கு மிகக் கொடூரமான மற்றும் கடுமையானப் பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை ‘எகனாமிக் டி-டே’ (Economic D-Day) எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் அரசிற்கு நிதி ரீதியாகவோ அல்லது வணிக ரீதியாகவோ ஆதரவு அளிக்கும் எந்தவொரு நட்பு நாட்டிற்கும் கடும் விளைவுகள் காத்திருப்பதாகத் தனது சமூக வலைதளப் பதிவில் எச்சரித்துள்ளார்.
ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள் ஏற்கனவே பேரழிவைச் சந்தித்துள்ளதாகவும், அந்நாட்டின் நாணயம் முற்றிலும் மதிப்பற்றுப் போய்விட்டதாகவும் தெரிவித்துள்ள டிரம்ப், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பொருளாதாரப் போர் அந்நாட்டை முழுமையாக முடக்கும் என்றார். சட்டவிரோத எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் கடத்தல், பணப் பரிவர்த்தனை மையங்கள், போலி நிறுவனங்கள் மற்றும் கப்பல் பதிவுகள் மூலம் ஈரானுக்குக் கிடைக்கும் அனைத்து நிதி ஆதாரங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் உத்தவிட்டுள்ளார்.
ஈரானுடன் வர்த்தக உறவைக் கொண்டிருக்கும் பிற நாடுகள் மற்றும் அவற்றின் நிதி நிறுவனங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் ஈரானுக்கு உதவினால், அந்த நாடுகளும் அமெரிக்காவின் கடுமையானப் பொருளாதாரத் தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரானுடன் வர்த்தகத் தொடர்பில் இருக்கும் சர்வதேச நாடுகளுக்கும் அமெரிக்கா நேரடி அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பிற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்கா தனது சொந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய “பொருளாதாரப் பயங்கரவாதத்தை” கையில் எடுத்துள்ளது எனக் கடுமையாகச் சாடியுள்ளார். ஆறு மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்க-ஈரான் மோதல் சூழலில், டிரம்பின் இந்த புதிய நகர்வு உலகளாவியச் சந்தைகளிலும் அரசியல் களத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.