Posted in

போலி ரீல் மோகம்: போபாலில் 16 வயது சிறுவன் படுகொலை – மனித உறுப்பு விற்க முயன்ற கொடூரம்!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சமூக வலைதளங்களில் பரவிய போலி செய்திக்கு ஆசப்பட்டு 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித உறுப்புகளை விற்றால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பரவிய வதந்தியை நம்பி, 20 வயதான BBA மாணவர் ஜோஹெப் கான் (Zoheb Khan) என்பவர் ஒரு கும்பலை உருவாக்கி இக்கொடூர குற்றத்தைச் செய்துள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படி, ஜோஹெப் கான் ஆன்லைனில் மருத்துவ உபகரணங்களை வாங்கித் தன்னை ஒரு மருத்துவ மாணவர் போல் காட்டிக்கொண்டு, தனது கூட்டாளிகளை நம்ப வைத்துள்ளார். ஆகஸ்ட் 6 அன்று, இக்பால் மைதானத்தில் பேனா மற்றும் சாவிக் கொத்திகளை விற்றுவந்த 16 வயது சிறுவனை, சண்டைக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், தோபி காட் அருகே வைத்து அச்சிறுவனை கத்தியால் குத்திக் கொலை செய்து, அவனது உடல் உறுப்பை அறுத்தெடுத்துள்ளனர்.

கொலைக்குச் பின், அறுத்தெடுக்கப்பட்ட உறுப்பை பனிக்கட்டியில் வைத்து 2 நாட்கள் மாடியில் பாதுகாத்து வாடிக்கையாளர்களைத் தேடியுள்ளனர். ஆனால், அந்த வதந்தி முழுவதும் பொய் என்பதால் அதனை வாங்குவதற்கு யாருமே கிடைக்கவில்லை. இதனால் பயமடைந்த அக்கும்பல், அந்த உறுப்புகளை பிளாஸ்டிக் பையில் போட்டு ஏரியில் வீசியெறிந்துள்ளது. சிறுவனின் உடல் ஆகஸ்ட் 10 அன்று கீழ் ஏரியில் (Lower Lake) அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு, அவனது கையில் இருந்த பச்சை குத்தலை வைத்து அடையாளம் காணப்பட்டது.

தற்போது இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி ஜோஹெப் கான் உட்பட 2 பெரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 3 சிறுவர்கள் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்கள் மற்றும் பேராசை எவ்வாறு அப்பாவி உயிரைப் பறிக்கும் கொடூர குற்றத்திற்கு வழிவகுக்கிறது என்பதற்கு இச்சம்பவம் மிகச் சிறந்த எச்சரிக்கையாக அமைந்துள்ளது.