Posted in

இந்தியச் திரைத்துறையில் பெரும் சோகம்: பத்மஸ்ரீ சௌகார் ஜானகி காலமானார்

இந்தியத் திரையுலகின் மூத்த நடிகையும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ‘சௌகார்’ ஜானகி (94) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகினர் மத்தியிலும், அவரது லட்சக்கணக்கான ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் ஆழந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1950-ஆம் ஆண்டு எல்.வி. பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘ஷாவுகாரு’ (Shavukaru) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் ‘சௌகார்’ ஜானகி என அன்போடு அழைக்கப்பட்டார். தமிழில் ‘வலைபதி’ படம் மூலம் அறிமுகமாகி, ‘புதிய பறவை’, ‘இரு கோடுகள்’, ‘எதிர்நீச்சல்’, ‘உயர்ந்த மனிதன்’, ‘தில்லு முல்லு’ என 400-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துத் தன் முத்திரையைப் பதித்தார்.

தனது ஏழு தசாப்த காலத் திரைப் பயணத்தில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், ரஜினிகாந்த் உள்ளிட்டப் பல தலைமுறை சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த பெருமைக்குரியவர். கலைத்துறைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு 2022-ஆம் ஆண்டு ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்தது. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருது உட்படப் பல மதிப்புமிக்க விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

மறைந்த சௌகார் ஜானகியின் உடலுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரை உலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்த அவரது மறைவுத் தென்னிந்தியச் சினிமா வரலாற்றில் ஒரு சகாப்தத்தின் முடிவு எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.