Posted in

ஏமன், சோமாலியா கடலில் அரங்கேறிய பயங்கரம்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த 2 சரக்குக் கப்பல்கள் கடத்தல்!

ஏமன் மற்றும் சோமாலியா கடல் எல்லைகளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு வர்த்தகச் சரக்குக் கப்பல்களைக் கடற்கொள்ளையர்கள் ஆயுதமுனையில் கடத்தியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு கப்பல்களிலும் மாலுமிகள் மற்றும் பணியாளர்களாக மொத்தம் 22 இந்தியர்கள் பயணித்துள்ளனர். ஏடன் வளைகுடா மற்றும் சோமாலியக் கடலோரப் பகுதிகளில் தனித்தனியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய கப்பல் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

முதலில், எரித்திரியா நாட்டின் கொடியுடன் ‘M T Sibu 1’ என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கானத் திரவச் சரக்குக் கப்பல் ஏடன் வளைகுடாவில் பயணித்தபோது ஆறு ஆயுதமேந்தியக் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டது. இதில் பயணித்த 20 மாலுமிகளில் 16 பேர் இந்தியர்கள் ஆவர். இதன் தொடர்ச்சியாக, கேமரூன் நாட்டின் கொடியுடன் பயணித்த ‘M/V LUTUF’ என்ற மற்றொரு சரக்குக் கப்பலைச் சோமாலியாவின் புன்ட்லேண்ட் கடலோரப் பகுதியில் வளைத்துப் போட்டக் கடற்கொள்ளையர்கள், கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்தக் கப்பலில் இருந்த 10 பணியாளர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர்.

கடத்தப்பட்ட இரு கப்பல்களிலும் உள்ள 22 இந்திய மாலுமிகளும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக ஊடக அறிக்கைகள் மற்றும் இந்திய அதிகாரிகளின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படை கண்காணிப்பு மையங்கள் மூலம் நிலைமை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தியக் கப்பல் துறை முகமைகள் மற்றும் சர்வதேசக் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மாலுமிகளைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளை இந்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியான சோமாலியா மற்றும் ஏமன் எல்லைக் கடல் பாதைகளில் கடந்த சில மாதங்களாகக் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சர்வதேச வர்த்தகப் போக்குவரத்திற்கு மிக முக்கியமானப் பாதையாக விளங்கும் ஏடன் வளைகுடாவில் அடுத்தடுத்து நடந்த இந்த இரு கடத்தல் சம்பவங்கள், சர்வதேசக் கப்பல் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் மாலுமிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் உஷார் நிலையையும் உருவாக்கியுள்ளன.