Posted in

உயிரைக் குடிக்கும் குறைபாடுகள்: போயிங் முன்னாள் ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்; 346 பேர் பலியான சோகத்திற்கு பின்னணி என்ன?

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ (Boeing), 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரு வேறு 737 மேக்ஸ் (737 MAX) விமான விபத்துகளில் 346 பயணிகள் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவியல் மோசடியை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மற்றும் விசில்புளோயர்கள் (Whistleblowers) வெளியிட்டுள்ள புதியத் தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உற்பத்தி இலக்குகளையும் லாபத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகளை நிறுவனம் அப்பட்டமாகப் புறக்கணித்ததாக அவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

போயிங் நிறுவனத்தின் முன்னாள் தரக்கட்டுப்பாட்டு மேலாளரான ஜான் பார்னட் (John Barnett) உள்ளிட்ட விசில்புளோயர்கள் அளித்த வாக்குமூலத்தில், 787 டிரீம்லைனர் (787 Dreamliner) ரக விமானங்களில் அவசர காலங்களில் செயல்பட வேண்டிய சுமார் 25 சதவீத ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் (Oxygen Masks) சரியாக இயங்காதக் கோளாறுடன் இருந்தது தெரிந்தும் அவை கண்டுகொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவசர காலத்தில் பயணிகள் சுவாசிப்பதற்கான இந்த அமைப்பில் குறைபாடுகள் இருப்பது மேலதிகாரிகளுக்குத் தெரிந்தும், உற்பத்திப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அந்த குறைபாடுள்ள பாகங்களே விமானங்களில் பொருத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, நிராகரிக்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட மற்றும் துருப்பிடித்துப் பாழடைந்த (Corroded) லேண்டிங் கியர் அச்சுகள் (Landing Gear Axles) மற்றும் சேதமடைந்த பாகங்களை ஊழியர்கள் மீண்டும் எடுத்து வந்து, ரசாயனங்களைக் கொண்டு சுத்தம் செய்து விமானங்களில் பொருத்திய அதிர்ச்சித் தகவலையும் சாமுவேல் மொஹாக் (Sam Mohawk) போன்ற பிற ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். “பார்ட்ஸ் ஜெயில்” (Parts Jail) எனப்படும் பாதுகாக்கப்பட்ட வைப்பகத்தில் வைக்கப்பட வேண்டியப் பழுதானப் பாகங்கள், நிறுவனத்தின் உற்பத்தி வேகத்தை ஈடுகட்டத் திருட்டுத்தனமாக மீண்டும் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் சாடியுள்ளனர்.

346 பயணிகள் உயிரிழந்த கொடூர விபத்துகளுக்கு அடிப்படையாக இருந்த போயிங் நிறுவனத்தின் இந்தக் ‘கார்ப்பரேட் அலட்சியம்’ மற்றும் ‘பாதுகாப்பற்ற உற்பத்தி கலாச்சாரம்’ குறித்து அமெரிக்கச் சிவில் விமான போக்குவரத்து அமைப்பும் (FAA) நாடாளுமன்றக் குழுக்களும் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன. உற்பத்தி வேகத்திற்காக மக்களின் உயிரைப் பணயம் வைத்த போயிங் நிறுவனத்தின் இந்த உள்நடவடிக்கைகள், சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளன.