உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய தலைநரான மாஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தியுள்ள பிரம்மாண்ட ட்ரோன் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி மாஸ்கோவின் முக்கிய வான்வழிப் பாதைகளை முடக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தகவல்களின்படி, மாஸ்கோவை சுற்றியுள்ள வான்வெளியில் உக்ரைனின் ‘M&M’ திட்டத்தின் கீழ் இந்த ஆளில்லா விமானங்கள் ஒரே நேரத்தில் ஊடுருவியதாகத் தெரிகிறது.
இந்த தொடர் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக மாஸ்கோவின் முதன்மை சர்வதேச விமான நிலையங்களான ஷெரெமெத்யேவோ, நுக்கோவோ மற்றும் டொமோடேடோவோ ஆகியவற்றின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது. வான்வெளி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல விமானங்கள் தரையிறக்கப்படாமலும், மாற்றுப் பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டும் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே முடங்கும் சூழல் உருவாகி, மாஸ்கோவின் வான்வழி போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது.
ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஒரே நேரத்தில் இத்தனை ட்ரோன்கள் ஊடுருவியது மாஸ்கோவின் பாதுகாப்பு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் இந்த உத்தியின் மூலம் ரஷ்ய தலைநகரின் உள்கட்டமைப்புகளுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தி, அந்நாட்டு மக்களிடையே உளவியல் ரீதியான தாக்கத்தை உருவாக்க முயல்கிறது. ரஷ்யாவின் முன்னணி தளவாட மையங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல், மாஸ்கோ நகர எல்லைக்குள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பேச்சுவார்த்தை மேஜைக்கு கொண்டு வரவும், போரின் நேரடிப் பாதிப்பை ரஷ்யாவின் மையப்பகுதிக்கு உணர்த்தவும் உக்ரைன் இத்தகைய வான்வழி உத்திகளை தீவிரப்படுத்தி வருகிறது. எல்லைப்பகுதியில் மட்டும் நடந்து வந்த மோதல் தற்போது மாஸ்கோவின் மையப்பகுதியை அச்சுறுத்தும் அளவுக்கு மாறியுள்ளது, வரவிருக்கும் நாட்களில் இரு நாடுகளுக்கு இடையேயான போரின் போக்கை மேலும் தீவிரமாக்கும் எனக் கருதப்படுகிறது.