Posted in

புற்றுநோயிலிருந்து மீண்ட 15 அடி மலைப்பாம்பு: மனிதர்களுக்கான மருத்துவ சிகிச்சையால் உலகின் முதல் சாதனை!

பிரிட்டனில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் (Chester Zoo) பராமரிக்கப்பட்டு வரும் ‘ஜோடி ஃபாஸ்டர்’ (Jodie Foster) என்ற 15 அடி நீளமும் 50 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பு, புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு வந்து மருத்துவ உலகில் புதிய வரலாறு படைத்துள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நவீனப் ‘எலக்ட்ரோசெமோதெரபி’ (Electrochemotherapy) என்ற புற்றுநோய் சிகிச்சை முறையைப் பெற்று உயிர்தப்பிய உலகின் முதல் பாம்பு என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

23 வயதான இந்த வலைப்பின்னல் மலைப்பாம்பின் (Reticulated python) தாடைப் பகுதியில் ‘ஃபைப்ரோசார்க்கோமா’ (Fibrosarcoma) என்ற கொடூரமான புற்றுநோய் கட்டி உருவாகியிருந்தது. இதனால் உணவை விழுங்க முடியாமல் அந்தப் பாம்பு கடுமையாக அவதிப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை மூலம் அக்கட்டி அகற்றப்பட்ட போதிலும், சில மாதங்களிலேயே மீண்டும் தோன்றி தாடை எலும்புப் பகுதியை அழிக்கத் தொடங்கியது. இதனால் பாம்பின் உயிரைக் காப்பாற்ற மாற்று வழிகளை மருத்துவர்கள் தேடத் தொடங்கினர்.

இதையடுத்து, செஸ்டர் பூங்கா கால்நடை மருத்துவர்கள் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழகப் புற்றுநோய் நிபுணர்கள் இணைந்து, மனிதர்களுக்கு அளிக்கப்படும் ‘எலக்ட்ரோசெமோதெரபி’ சிகிச்சையை மலைப்பாம்பின் உடலமைப்பிற்கு ஏற்ப மாற்றியமைத்தனர். 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையின் போது, புற்றுநோய் மருந்துடன் சேர்த்து லேசான மின்சாரத் தூண்டுதல்கள் (Electrical Pulses) வழங்கப்பட்டுத் தாடையில் எஞ்சியிருந்த புற்றுநோய் செல்கள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டன.

சிகிச்சை முடிந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில், ‘ஜோடி ஃபாஸ்டர்’ தற்போது புற்றுநோயின் பிடியிலிருந்து முற்றிலும் விடுபட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பி வழக்கம் போல் இரையை விழுங்கத் தொடங்கியுள்ளதாகப் பூங்கா நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இச்சாதனை குறித்துத் தயாரித்துள்ள விரிவான அறிக்கையைச் சர்வதேசக் கால்நடை மருத்துவ இதழ்களில் வெளியிட ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.