Posted in

போனை தூக்கி வைங்க.. ஜிபே வேண்டாம்: புதுக்கோட்டையில் விவசாயியிடம் கச்சிதமாக லஞ்சம் பேரம் பேசிய பெண் சர்வேயர்; வீடியோ வைரல்!

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே உள்ள ராயவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி உருமையா, தனது மனைவி பெயரில் உள்ள விவசாய நிலத்திற்குப் பட்டா உட்பிரிவு (Patta Subdivision) செய்ய புத்தாம்பூர் பெண் நில அளவையர் (சர்வேயர்) எழில்கொடியை அணுகியுள்ளார். ஏற்கனவே அந்த வேலையை முடித்துக் கொடுக்க உருமையாவிடமிருந்து ரூ.2,000 லஞ்சமாக வாங்கப்பட்ட நிலையில், தற்போது பணியை விரைவாக முடிக்க மேலும் கூடுதலாக ரூ.2,000 லஞ்சம் கேட்கும் பரபரப்பான உரையாடல் வீடியோ செய்தித் தளத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில் பேசும் சர்வேயர் எழில்கொடி, “முதலில் செல்போன்களை தூக்கி ஓரமாக வையுங்கள், காலம் ரொம்ப மோசமாக இருக்கிறது, இப்போது யாரையுமே நம்ப முடியவில்லை! நமது சொந்த கையைக்கூட நம்மால் நம்ப முடியவில்லை” எனப் லஞ்ச ஒழிப்புத் துறையின் பயத்தில் எச்சரிக்கையுடன் உரையாடத் தொடங்குகிறார். மேலும், “ரூ.1,000 எல்லாம் போதாது, ரூ.2,000 கொடுங்கள். எனக்கு ஜிபே (GPay) கணக்கு கிடையாது, வீட்டில் உள்ளவர்களின் ஜிபே எண்ணுக்கும் பணம் அனுப்ப வேண்டாம்” என ரொக்கமாக மட்டுமே லஞ்சம் கேட்கும் வெளிப்படையான பேரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி உருமையா பணம் கொடுக்கத் தாமதமானால், “சீக்கிரம் எல்லாம் வேலை முடியாது, எவ்வளவு நாளில் முடியும் என்றும் சொல்ல முடியாது” என மறைமுகமாகப் பணத்தை விரைந்து தருமாறு அழுத்தம் கொடுப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதிகாரிகளின் இந்த அப்பட்டமான லஞ்சப் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நில அளவைத் துறையில் நடக்கும் இத்தகைய முறைகேடுகளை வீடியோவாக ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

ஏழை விவசாயியிடம் ஓபனாக லஞ்சம் பேரம் பேசி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையான ஜிபே-வை தவிர்த்து ரொக்கமாகக் கேட்கும் பெண் சர்வேயரின் இந்த வீடியோ பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வீடியோ ஆதாரம் இணையத்தில் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நில அளவையர் எழில்கொடி மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.