பூமி உருவாகி சுமார் 460 கோடி ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இங்கு உயிரினங்களின் தோற்றம் எப்போது தொடங்கியது என்பது குறித்த சர்வதேச ஆய்வில் இந்திய நிலப்பரப்பு புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள பீதர்தாரி (Bhitardari) கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பாறைகளில், சுமார் 350 கோடி (3.5 Billion) ஆண்டுகள் பழமையான அரிய நுண்ணுயிரிகளின் (Microbial Life) எச்சங்கள் இருந்ததை இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் பெண் புவியியலாளர் திரிஸ்ரோதா சௌத்ரி தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
ஜார்க்கண்டின் பண்டைய கண்ட மேடான ‘சிங்பூம் கிரேட்டான்’ (Singhbhum Craton) பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட ‘சர்ட்’ (Chert) என்ற கார்பன் செறிந்த அடுக்கமைவு பாறைகளை ஆய்வு செய்தபோது, அதில் படிந்துள்ள நுண்மக் கூட்டமைப்பின் வேதித் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்காவின் மதிப்புமிக்க ‘தேசிய அறிவியல் அகாடமி நடவடிக்கைகளின்’ ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த முடிவுகள், பிரபஞ்சத்தில் உயிர்களின் தோற்றம் குறித்த புதிய தேடல்களுக்குக் கதவு திறந்துள்ளன.
பொதுவாக, பில்லியன் கணக்கான ஆண்டுகள் வெப்பம் மற்றும் அழுத்தத்திற்கு ஆளாகும் பாறைகளில் உயிரினங்களின் மெல்லிய அடையாளங்கள் அழிந்துவிடும். ஆனால், இந்த பாறைப் படிமங்களில் உள்ள ஜிா்கான் (Zircon) படிகங்களைப் பயன்படுத்தி யுரேனியம்-ஈயம் காலக்கணிப்பு முறையில் நேரடியாக ஆய்வு செய்ததில், இவை துல்லியமாக 349.7 கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், உயிரினச் சான்றுகளும் பாறையின் வயதும் நேரடியாகப் பொருந்திப்போகும் அரிதான வரலாற்றுச் சான்றாக இது மாறியுள்ளது.
சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே, கடலடி எரிமலைப் பகுதிகள் மற்றும் சிலிக்கா செறிந்த கடுமையான சூழலிலும் நுண்ணுயிரிகள் தங்களைத் தகவமைத்துக் கொண்டு கார்பன் டை ஆக்சைடை கரிமப் பொருட்களாக மாற்றி வாழ்ந்துள்ளன என்பதை இக்கண்டுபிடிப்பு நிரூபித்துள்ளது. கிரீன்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக, பூமியின் ஆரம்பகால உயிரினங்களின் நேரடி வாழ்விடமாக இந்திய நிலப்பரப்பு திகழ்ந்துள்ளது என்பதை இக்கண்டுபிடிப்பு சர்வதேச அரங்கில் உலகிற்கு உணர்த்தியுள்ளது.