Posted in

நியூயார்க்கில் இந்திய பீட்சா டெலிவரி ஊழியர் சுட்டுக்கொலை: கதறித் துடிக்கும் தந்தை!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பீட்சா டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான குர்தீப் சிங் (Gurdeep Singh) என்ற இந்திய இளைஞர் மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். புரூக்ளின் (Brooklyn) பகுதியின் ஈஸ்ட் நியூயார்க்கில் உள்ள க்ரசென்ட் தெரு அருகே இரவு நேரத்தில் டெலிவரி செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான இச்சம்பவம் கபூர்ஸலா பகுதியில் உள்ள அவரது சொந்தக் கிராமத்தையே உலுக்கியுள்ளது.

குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் கடன் வாங்கி 2017-ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்ற குர்தீப் சிங், அங்கு பகுதி நேரமாகப் பீட்சா டெலிவரி ஏஜென்ட்டாகப் பணிபுரிந்து வந்தார். இச்சம்பவம் குறித்துப் பேசிய அவரது தந்தை பியாரா லால் (Pyara Lal), “குடும்பத்திற்காக இரவு பகலாக உழைத்த என் மகனைப் பணப் பரிவர்த்தனை தகராறில் வாடிக்கையாளர் சுட்டுக் கொன்றுவிட்டார்” எனக் கூறி கதறி அழுத காட்சி காண்போரை நெகிழ வைத்துள்ளது.

காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குர்தீப் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நியூயார்க் காவல்துறையினர் (NYPD) தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் வழிப்பறி முயற்சியாக (Robbery Bid) இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், குற்றவாளியைக் கண்டறிய காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் அடுத்தடுத்து இந்திய இளைஞர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து வருவது புலம்பெயர் இந்திய சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குர்தீப் சிங்கின் உடலை விரைவாக இந்தியாவுக்குக் கொண்டுவர ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் வட அமெரிக்க பஞ்சாபி சங்கமும் (NAPA) கோரிக்கை விடுத்துள்ளன.