Posted in

பிரிட்டன் மின் நிலையத்தை முடக்கிய ஈரான் ஹேக்கர்கள்: 4 நாட்கள் தொடர்ந்த அதிர்ச்சி சைபர் தாக்குதல்!

பிரிட்டனில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்று ஈரானைச் சேர்ந்த ஹேக்கர்களால் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, சுமார் நான்கு நாட்கள் முற்றிலும் இயங்காமல் முடக்கப்பட்டதாக நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் ஆற்றல் துறை உள்கட்டமைப்பை இலக்கு வைத்து வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் தாக்குதலாக இது பார்க்கப்படுவதால், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரண கருதி பாதிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையத்தின் பெயர் மற்றும் அமைவிடம் குறித்த விவரங்களை பிரிட்டன் அரசு வெளியிடவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட மின் நிலையம் மிகவும் சிறிய அளவிலானது என்றும், இதனால் நாட்டின் பிரதான மின் விநியோகக் கட்டமைப்பிற்கு (National Grid) எந்தவொரு பாதிப்போ அல்லது மின்தடையோ ஏற்படவில்லை என்றும் பிரிட்டன் ஆற்றல் பாதுகாப்புத் துறை அமைச்சு (DESNZ) தெளிவுபடுத்தியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய ஹேக்கர்கள், பிரிட்டனின் மின் உள்கட்டமைப்பிற்குள் தங்களால் ஊடுருவ முடியும் என்பதைப் பறைசாற்றும் ‘திறன் விளக்கமாகவே’ (Proof of Capability) இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனப் பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள 12 மாநிலங்களில் குடிநீர் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஈரானிய ஹேக்கர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு இணையான காலக்கட்டத்திலேயே இச்சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பிரிட்டனின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) நாட்டின் அனைத்து ஆற்றல் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இணைய வழியிலான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், தனியார் மற்றும் அரசு சார்ந்த அனைத்து அமைப்புகளும் தங்களது சைபர் பாதுகாப்பு நடைமுறைகளை பலப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.