Posted in

சென்னையில் கொடூரம்: பெண்ணைக் கொலை செய்து உடலைச் சூட்கேஸில் அடைத்து இரயிலில் அனுப்பிய தம்பதி?

சென்னையில் ஹயாத் நிஷா என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுச் சூட்கேஸில் அடைக்கப்பட்டு இரயில் மூலம் டெல்லி நோக்கி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் அஸ்ஸாம் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ராகுல் மற்றும் பகவதி மாஜி என்ற தம்பதியை இரயில்வே காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காவல் துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில், ஹயாத் நிஷாவைக் கொலை செய்த நபர்கள் அவரது உடலைச் சிதைத்துச் சூட்கேஸில் வைத்து இரயிலில் ஏற்றிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை பகுதி இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. தலையைச் சிதைத்துத் தடயங்களை அழிக்கும் நோக்கில் இரயிலில் செல்லும் வழியிலேயே வெளியே வீசியிருக்கக் கூடுமா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாகக் காணாமல் போன தலை பகுதியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தலைமறைவாக உள்ள ராகுல் – பகவதி மாஜி தம்பதியைப் பிடிப்பதற்காகச் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அஸ்ஸாம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர வலைவீசப்பட்டுள்ளது. தம்பதி பிடிபட்டால் மட்டுமே இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள முழுமையான காரணங்கள் வெளிவரும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூரக் கொலை சம்பவம் இரயில் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில், இரயில்வே காவல் துறையினர் மாநில எல்லைக் சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.