ஈரான் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்க அரசு ‘ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ (Operation Economic Outcast) எனும் பெயரில் தீவிரப் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துள்ள எந்தவொரு நாடோ அல்லது அமைப்போ அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகளுக்கு (Secondary Sanctions) ஆளாக நேரிடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. வாஷிங்டனின் இந்த அதிரடி நடவடிக்கை ஈரானை சர்வதேச அளவில் நிதி ரீதியாகத் தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கடுமையான பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளான சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஆசிய நாடுகளைப் பெரிதும் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளன. ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனாவிற்கு இது பெரும் முட்டுக்கட்டையாக அமையும். மறுபுறம், ஈரானின் சாபஹார் துறைமுகத் திட்டம் மற்றும் பிராந்திய வர்த்தகப் பாதைகளில் முதலீடு செய்துள்ள இந்தியாவிற்கும், எல்லை தாண்டிய எரிசக்தித் திட்டங்களைக் கொண்டுள்ள பாகிஸ்தானிற்கும் இது புதிய சவால்களை எழுப்பியுள்ளது.
அமெரிக்கா உடனடியாக இந்தத் தடைகளை நடைமுறைப்படுத்தாமல், ஈரானுடனான வர்த்தகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ள குறிப்பிட்ட கால அவகாசம் (Cure Period) அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்க டாலர் அடிப்படையிலான சர்வதேசப் பணப்பரிவர்த்தனை அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படும் என்ற அச்சம் காரணமாக, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்களின் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் எண்ணெய் வர்த்தகக் கட்டுப்பாடுகள் உலக அளவில் கச்சா எண்ணெய் வில உயர்வுக்கு வழிவகுக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் இந்த பொருளாதாரத் தாக்குதலுக்கு எதிராக ஈரானும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளதால், தெற்காசிய மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதைச் சர்வதேச வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.