கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக (TVK) வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றியை எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் (VVPAT) சீட்டுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மனுவில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்த கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் சீட்டுகளைச் சரிபார்த்ததில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளும் முறைகேடுகளும் கண்டறியப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, சுமார் 6 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட் சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்த போது பெரிய அளவிலான வேறுபாடுகள் வெளிவந்துள்ளதால், வி.எஸ். பாபுவின் வெற்றிச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய விளக்கங்கள் அளிக்கப்படவில்லை என்பதால் நீதிமன்றத் தலையீடு அவசியம் என வலியுறுத்தினர். மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
கொளத்தூர் தொகுதியின் தேர்தல் முடிவுகள் தொடர்பான இந்த வழக்கு தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. நீதிமன்றத்தின் விசாரணைக்குப் பிறகே இந்த வழக்கில் அடுத்தகட்ட நகர்வுகள் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது