ஸ்பெயினின் புகழ்பெற்ற இபிசா (Ibiza) மற்றும் பாலீரிக் (Balearic Islands) தீவுப் பகுதிகளில் எதிர்பாராதவிதமாக உருவான ‘மினி சுனாமி’ (Meteotsunami) காரணமாகக் கடலோர வீதிகள் மற்றும் உணவகங்களுக்குள் கடல் நீர் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளிமண்டல அழுத்தத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக எழும்பிய அதிவேக அலைகள், கடற்கரையை ஒட்டியுள்ள வணிக வளாகங்கள் மற்றும் உணவகப் பகுதிகளைச் சூழந்து வெள்ளக்காடாக மாற்றியதாக செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்படும் சாதாரண சுனாமியைப் போல் அல்லாமல், வளிமண்டலக் காற்று அழுத்தம் மற்றும் புயல் மாற்றங்களால் உருவாகும் இந்த நிகழ்வை உள்ளூர் மொழியில் ‘ரிஸாகா’ (Rissaga) என்று அழைக்கின்றனர். திடீரென உயர்ந்து சீறிப்பாய்ந்த அலைகளால் கடலோர உணவகங்களில் இருந்த இருக்கைகள், குடைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தத் திடீர் நிகழ்வின் காணொளிகள் இணையத்தில் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகின்றன.
கடல் மட்டம் திடீரென சில அடிகள் உயர்ந்து கரையை நோக்கிப் பாய்ந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பலத்த காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனத் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், சீரற்ற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் முன்னெச்சரிக்கையாகக் கடலோரப் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருந்த பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் இசைக்கச்சேரிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
ஸ்பெயின் வானிலை மையம் (AEMET) கடலோரப் பகுதிகளுக்குத் தொடர்ந்து கண்காணிப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை ஓரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தற்பொழுது கடலோரப் பகுதிகளைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.