Posted in

ஏலியன்களுக்குப் பதிலளிக்க வேண்டாம் எனச் சீனா தனது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததா?

வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் (Aliens) யாராவது தொடர்பு கொண்டால், அதற்குத் தன்னிச்சையாகப் பதில் அளிக்கக் கூடாது என்றும், உடனடியாக ஐக்கிய நாடுகள் சபைக்குத் (UN) தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சீன அரசு தனது நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. “அனுமதியின்றி ஏலியன்களுக்குப் பதிலளிக்க வேண்டாம்” என்ற போலி அறிவிப்புப் பலகைகளுடன் கூடிய புகைப்படங்கள் டிக்டாக், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த தகவல் முற்றிலும் போலி மற்றும் அடிப்படையற்றவதாகும் எனத் தெரியவந்துள்ளது. சீன அரசாங்கமோ அல்லது அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களோ இதுபோன்ற எந்தவொரு எச்சரிக்கையையோ அல்லது விதிகளையோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. சமூக வலைத்தளங்களில் அதிகப் பார்வைகளைப் (Views) பெறுவதற்காகவே இத்தகைய போலிச் செய்திகள் சித்தரிக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த வித்தியாசமான வதந்தியின் தோற்றுவாய் குறித்து ஆராய்ந்த போது, புகழ்பெற்ற சீன அறிவியல் புனைகதை எழுத்தாளரான லியு சிக்சின் (Liu Cixin) எழுதிய ‘தி த்ரீ-பாடி பிராப்ளம்’ (The Three-Body Problem) என்ற நாவலே இதன் பின்னணியாக உள்ளது தெரியவந்துள்ளது. அந்த நாவலின் கதையில், விண்வெளியில் இருந்து வரும் ஆபத்தான ஏலியன்களின் சமிக்ஞைகளுக்கு “பதிலளிக்க வேண்டாம்” (DO NOT ANSWER) என்ற எச்சரிக்கை விடுக்கப்படும். அந்தப் புனைகதை வரிகளை உண்மை நிகழ்வு போலச் சித்தரித்து இணையவாசிகள் பரப்பி விட்டுள்ளனர்.

இதேபோன்று, அண்மையில் “பூமியில் சில வினாடிகள் புவியீர்ப்பு விசை செயலிழக்கும்” என்பது உள்ளிட்ட பல வினோதமான வதந்திகளும் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது. எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் இதுபோன்ற விண்வெளி மற்றும் அறிவியல் சார்ந்த அதிர்ச்சிச் செய்திகளை பொதுமக்கள் தீர விசாரிக்காமல் நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்று உண்மைத் தன்மையை ஆராயும் அமைப்புகள் (Fact Checkers) அறிவுறுத்தியுள்ளன.