Posted in

முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளரா? காங்கிரஸின் நிலைப்பாடு என்ன: திட்டவட்டமாகச் சொன்ன அமைச்சர் ராஜேஷ் குமார்!

தமிழகச் சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதங்களின் போதும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் சமூக வலைத்தள ஆதரவாளர்கள் மத்தியிலும் முதலமைச்சர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சுகள் பரவி வருகின்றன. இது குறித்துக் கூட்டணி அரசு அங்கமான காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்த சூழலில், தமிழக காங்கிரஸ் அமைச்சரான எஸ். ராஜேஷ் குமார் இது தொடர்பான கட்சியின் தெளிவான நிலைப்பாட்டைச் செய்தியாளர்களிடம் முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார், “காங்கிரஸ் கட்சி 140 ஆண்டுகாலப் பாரம்பரியமிக்க ஒரு தேசிய இயக்கம். எங்கள் கட்சியைப் பொறுத்தவரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திதான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என்பதில் எவ்வித சந்தேகமும் குழப்பமும் இல்லை. 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி நிச்சயம் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்பதே எங்களின் உறுதியான நம்பிக்கை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராகப் பிரகடனப்படுத்துவது குறித்துக் கேட்கப்பட்டதற்கு, “ஒவ்வொரு கட்சியினருக்கும் தங்களது தலைவர்கள் குறித்துப் பேசவோ கருத்துத் தெரிவிக்கவோ உரிமை உள்ளது. இருப்பினும், யூகங்களின் அடிப்படையில் எழும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது; தற்போதைய சூழலில் ஆட்சிப் பொறுப்பிலிருந்து கொண்டு மக்கள் நலத் திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் திறம்படச் செயல்படுத்துவதே எங்கள் கூட்டணியின் முதன்மை இலக்காகும்” என்று அவர் விளக்கமளித்தார்.
மேலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகக் தவெக தலைமை ஏற்றுக்கொள்ளுமா என்ற வினாவுக்கு, கூட்டணியின் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் தவெக நிச்சயமாக ராகுல் காந்தியின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் என நம்பிக்கை தெரிவிப்பதாகக் கூறினார். ஆட்சியில் தவெக மற்றும் காங்கிரஸ் இணைந்து பயணித்தாலும், தேசிய அளவில் பிரதமர் வேட்பாளர் விசயத்தில் காங்கிரஸ் தனது பழைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை அமைச்சரின் இந்தப் பேட்டி வெளிப்படுத்தியுள்ளது.