Posted in

வரலாற்றை இருட்டடிப்பு செய்வதா?: தவெக அரசு மீது பாய்ந்த விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன்!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கொள்கைக் குறிப்பேட்டில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தவெக அரசுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாகக் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ள சிந்தனை செல்வன், கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட கொள்கைக் குறிப்பில் இடம்பெற்றிருந்த வரலாற்றுத் தலைவர்களின் பெயர்களும் செய்திகளும் இந்த ஆண்டு அடியோடு நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். “வரலாற்றை அரசியல் வசதிக்கேற்ப எழுதவோ அல்லது அழிக்கவோ முடியாது; வரலாற்றை இருட்டடிப்பு செய்வதை விட பெரிய வன்கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது” என அவர் ஆவேசமாகச் சாடியுள்ளார்.
எனினும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் மீது இதில் தவறைச் சுமத்த முடியாது என்றும், கொள்கைக் குறிப்பை தயாரிக்கும் பொறுப்பில் உள்ள தலைமைச் செயலாளரும், துறை சார்ந்த செயலாளர்களுமே இந்த தவறுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசு தலைமைச் செயலாளரின் வழிகாட்டலும் அனுமதியும் இன்றி கொள்கைக் குறிப்பில் இத்தகைய மாற்றங்களைச் செய்திருக்க முடியாது என்பதால், துறைச் செயலாளர்கள் இதற்காகச் சுய விளக்கத்துடன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சமூகநீதிப் பயணம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட அரசு அல்லது அரசியல் கட்சியின் சாதனைக் பட்டியல் அல்ல என்றும், அது பல தலைமுறைகளின் தியாகப் போராட்ட வரலாறு என்றும் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாகத் தலையிட்டு தவறுகளைச் சரி செய்ய வேண்டும் என்றும், வரலாற்று இருட்டடிப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் கூட்டணிக் கட்சியான விசிகவிடம் இருந்தே அரசு கொள்கைக் குறிப்பிற்கு எதிராகக் கண்டனக் குரல் எழுந்திருப்பது சட்டமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.