Posted in

கூடுவாஞ்சேரி கொடூரம்: பிரியாணி அண்டாவில் மனிதக்கறி சமைத்த கொலையாளி மணிப்பூரில் கைது!

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்து, உடற்பாகங்களைப் பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மற்றும் மாவுடன் கலந்து வேகவைத்து, மீதிப் பாகங்களை ஆக்ரா சென்ற ரயிலில் வீசிவிட்டுத் தப்பியோடிய வழக்கில் முக்கியக் குற்றவாளியை மணிப்பூரில் வைத்துத் தனிப்படைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நாடெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் (22) என்ற வாலிபர் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக்ரா அருகே துர்நாற்றம் வீசிய சூட்கேஸில் இருந்து பெண் ஒருவரின் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. சூட்கேஸில் இருந்த பிளாஸ்டிக் கவரை வைத்து விசாரணையைத் தொடங்கிய ரயில்வே மற்றும் சென்னை தனிப்படைப் போலீசார், சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டைக் கண்டறிந்து சோதனையிட்டனர்.
அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹைத்துல் நிஷா (38) என்ற பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. உடலின் பல பாகங்கள் பிரியாணி அண்டாவில் காய்கறிகளுடன் சமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கிருந்த பாகங்களைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை அடையாளமின்றி அழிக்கவே கொலையாளிகள் இந்த பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமானது.
கொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடிய மாணிக் உத்தின் லஸ்கர் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை செல்போன் சிக்னல் மூலம் அறிந்த தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர். அவருடன் தப்பியோடிய அவரது மனைவியையும் தேடி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட நபரைக் காவல் பிடியாணை (Transit Warrant) மூலம் சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.