தருமபுரியில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் பிரம்மாண்ட விழாவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த எதிர்பாராத மின்தடையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதனையே சுட்டிக்காட்டி தவெக அரசின் மின்சாரத் துறை நிர்வாகச் சீர்கேட்டை எடப்பாடி பழனிசாமி காரசாரமாகச் சாடிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் தாராளமாக வழங்கப்பட்டது. ஆனால் இன்றைக்குத் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது; நாம் கூட்டம் நடத்தும் இந்த மேடையிலேயே மின்சாரம் போயிருக்கிறது என்றால், இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம்” என கடுமையாகச் சாடினார். மேலும், தமிழகத்தில் எவ்விதத் தெளிவான கொள்கையும் இன்றி ஏதோ ஒரு விபத்தினால் தான் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும், குறுகிய காலத்திலேயே பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியதே இந்த அரசின் சாதனையாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினார். மின்வெட்டுப் பிரச்சனை, விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாகத் திறனின்மை காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளைப் பேசாமல் சொந்தப் பிரச்சனைகளையே ஆளுங்கட்சியினர் பேசி வருவதாகத் தெரிவித்தார்.
அமமுக மற்றும் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்த இந்நிகழ்ச்சியில், தாய் கழகத்திற்குத் திரும்பிய அனைவரையும் வரவேற்பதாக இபிஎஸ் தெரிவித்தார். மேடையில் பழனிசாமி பேசும்போது மின்சாரம் கட் ஆனதும், அதற்கு அவர் உடனடிப் பதிலடியாக தவெக அரசை விமர்சித்த வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.