தமிழக முதல்வர் விஜய்தான் நாட்டின் அடுத்த பிரதமர் என அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வரும் நிலையில், அதற்கு பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான பதிலை அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக வேறொருவரை நாட்டின் பிரதமராகச் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “தமிழக மக்கள் முதல்வர் விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் வாய்ப்பை வழங்கி ஆட்சியதிகாரத்தில் அமர்த்தியுள்ளனர். அந்த வாய்ப்பையும் பதவியையும் அவரும் அவரது கட்சியினரும் முதலில் மக்களுக்கு நன்மைகள் செய்ய சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் முதல்வராகி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், அதற்குள் அவரை நாட்டின் பிரதமராக முன்னிறுத்துவது ஏற்புடையதல்ல” என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பிரதமர் மோடியின் அரசியல் அனுபவத்தை சுட்டிக்காட்டிய அவர், “பிரதமர் மோடி தொடர்ச்சியாக மூன்று முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் பிரதமராகவும், அதற்கு முன் முதலமைச்சராகவும் என கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் அசைக்க முடியாத அனுபவம் பெற்றவர். அத்தகைய நீண்டகால அரசியல் அனுபவமும் மக்கள் செல்வாக்கும் கொண்ட மோடிக்கு இணையாக வேறு யாரையும் ஒப்பிட்டுப் பேசவோ சிந்தித்துப் பார்க்கவோ முடியாது” எனக் குறிப்பிட்டார்.
ஜனநாயக நாட்டில் எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்று கூறிய தமிழிசை, பேச்சு அளவில் சொல்வது வேறு, நடைமுறையில் நடப்பது வேறு என்று விமர்சித்தார். தமிழகத்தில் தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய், தனது முழு கவனத்தையும் தமிழகத்தின் நிர்வாகப் பணிகளிலும் மக்கள் நலனிலும் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியது அரசியல் வட்டாரத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.