Posted in

நேதன்யாகுவின் அரிதான கண்டனம்; மேற்குக் கரை வன்முறையில் இஸ்ரேலியக் குடியேறிகள் மீது நடவடிக்கை உத்தரவு

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் உள்ள குஸ்ரா (Qusra) மற்றும் ஜாலூத் (Jalud) கிராமங்களில் பாலஸ்தீன மக்கள் மீது தீவிரவாத இஸ்ரேலியக் குடியேறிகள் நடத்திய பயங்கரத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலியக் குடியேறிகளின் வன்முறையைக் அரிதான முறையில் பகிரங்கமாகக் கண்டித்துள்ள நேதன்யாகு, இத்தகைய சட்டவிரோதக் குற்றச் செயல்களைத் தாம் “வன்மையாகக் கண்டிப்பதாக” அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனக் கிராமங்களுக்குள் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியக் குடியேறிகள் புகுந்து வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், பாலஸ்தீன குடும்பத்தினர் உள்ளேயே இருந்த வீட்டிற்குள் புகுந்து பிணைக்கைதிகளைப் போல முடக்கியதாகத் தெரிகிறது. இந்தத் திடீர் வன்முறையில் பாலஸ்தீன மக்கள் பலர் காயமடைந்ததுடன், சர்வதேச ஊடகவியலாளர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
இந்தச் சம்பவம் குறித்து நேதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், “சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருசில கலவரக்காரர்கள், சட்டத்தை மதிக்கும் பிற இஸ்ரேலிய மக்களுக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றனர். மேலும் இஸ்ரேல் ராணுவத்தின் (IDF) பாதுகாப்புப் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதோடு, சர்வதேச அளவில் இஸ்ரேலின் நற்பெயருக்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்துகின்றனர்” என மிகவும் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற இஸ்ரேலிய ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கலவரக்காரர்களைக் கிராமங்களில் இருந்து வெளியேற்றி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த வன்முறை தொடர்பாக இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு முகமையான ‘ஷின் பெட்’ (Shin Bet) மற்றும் காவல்துறை இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்த நேதன்யாகு, குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் உத்தரவிட்டுள்ளார்.