சர்வதேச அளவில் ‘ஃபென்டனைல்’ (Fentanyl) என்ற செயற்கை போதைப்பொருள் ஏற்படுத்தி வந்த பேரழிவை விட, பல மடங்கு ஆபத்தான ‘நைட்டாஸீன்ஸ்’ (Nitazenes) எனும் “கண்ணுக்குத் தெரியாத போதைப்பொருட்கள்” (Ghost Opioids) வேகமாகப் பரவி வருவது உலகளாவிய சுகாதார அமைப்புகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாமானிய ஃபென்டனைல் போதைப்பொருளைக் காட்டிலும் 10 மடங்கு முதல் 100 மடங்கு வரை அதிக வீரியம் கொண்ட இந்த நச்சுப் பொருட்கள், தெருவோரங்களில் விற்கப்படும் பிற சாதாரண மருந்துகளுடன் கலக்கப்பட்டு இரகசியமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 1950-களில் சுவிட்சர்லாந்தில் வலி நிவாரணியாக உருவாக்கப்பட்ட இந்த வேதிப்பொருட்கள், அவற்றின் தீவிரமான நச்சுத்தன்மை மற்றும் உடனடி மரணத்தை ஏற்படுத்தும் பேராபத்து காரணமாக மருத்துவப் பயன்பாட்டிற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், சட்டவிரோத இரசாயன ஆய்வகங்களில் தற்போது இவை மறுஉருவாக்கம் செய்யப்பட்டு, ‘ஃபிரான்கன்ஸ்டைன் ஓபியாய்ட்ஸ்’ (Frankenstein Opioids) என்ற பெயரில் சர்வதேச போதைப்பொருள் சந்தைக்குள் ஊடுருவியுள்ளன.
இவற்றை ‘கண்ணுக்குத் தெரியாத போதைப்பொருள்’ என அழைப்பதற்குக் முக்கியக் காரணம், இவை வழக்கமான போதைப்பொருள் பரிசோதனை கருவிகளால் (Drug Test Strips) எளிதில் கண்டறிய முடியாத அளவுக்கு நுட்பமான அமைப்பைக் கொண்டுள்ளன. அத்துடன், வலி நிவாரணி மாத்திரைகள், ஹெராயின் மற்றும் போலி போதை மருந்துகளில் மிகச்சிறிய அளவில் (கடுகு அளவை விடக் குறைவாக) கலக்கப்படுவதால், தாங்கள் என்ன உட்கொள்கிறோம் என்பதே தெரியாமல் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
இவை மனித உடலுக்குள் சென்ற சில நிமிடங்களிலேயே சுவாசக் மண்டலத்தை முற்றிலுமாக முடக்கி, மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவைக் குறைத்து உடனடி மரணத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய ஆபத்தான நச்சுப்பொருட்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்கத் தேவையான அவசரகால தடுப்பு மருந்துகளைச் (Naloxone) தயார் நிலையில் வைக்குமாறும், முறையான மருத்துவப் பரிந்துரையின்றி வாங்கும் எந்தவொரு போலி மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டாம் என்றும் சர்வதேசக் காவற்துறையினரும் சுகாதார அதிகாரிகளும் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.