Posted in

தோன்றி மறையும் விசித்திரத் தீவு: கனடா நீர் தேக்கத்தில் மிதக்கும் நிலப்பரப்பால் பரபரப்பு!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள ‘வில்லிஸ்டன் நீர் தேக்கத்தில்’ (Williston Reservoir) அடர்ந்த மரங்களுடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான தீவு திடீரெனத் தோன்றி, பின்னர் மாயமாய் மறைந்து, மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு வேறு இடத்தில் காட்சியளிக்கும் விசித்திர நிகழ்வு உலகளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவுக்கு (சுமார் 105,000 சதுர அடி) பரப்பளவு கொண்ட இந்த நிலப்பரப்பு நீரில் மிதந்து செல்வது செயற்கைக்கோள் படங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாத இறுதியில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் முதன்முதலாக இந்த மிதக்கும் தீவைக் கண்டறிந்த அதிகாரிகள், ஆகஸ்ட் தொடக்கத்தில் அது அதே இடத்தில் இல்லாமல் மறைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அந்த ஏரிக்கு அருகே படகில் சென்ற உள்ளூர்வாசி ஒருவர் அதே மரங்கள் நிறைந்த நிலப்பரப்பு வேறு ஒரு கரைப் பகுதியில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு வீடியோவாக எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் இந்த விசித்திரத் தீவு குறித்த செய்திகள் காட்டுத்தீ போல் பரவின.
இந்தச் விசித்திர நிகழ்வு குறித்து ஆய்வு செய்த ‘பி.சி. ஹைட்ரோ’ (B.C. Hydro) மின்வாரிய அதிகாரிகள் மற்றும் புவியியல் வல்லுநர்கள், “கடந்த குளிர்காலத்தில் பெய்த அதிக பனிப்பொழிவு மற்றும் கோடைக்கால கனமழை காரணமாக நீர் தேக்கத்தின் நீர்மட்டம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது” என்று தெரிவித்தனர். இதன் காரணமாகக் கரைப் பகுதியில் பல ஆண்டுகளாக மக்கிப்போன மரக் கட்டைகள், வண்டல் மண் மற்றும் வேர்ப் பிடிப்புகளுடன் சேர்ந்திருந்த நிலப்பரப்பு, நீரழுத்தம் மற்றும் காற்றினால் கரையிலிருந்து தனியாகப் பிரிந்து மிதக்கத் தொடங்கியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.
மரங்களின் கிளைகள் பாய்மரப் படகின் பாய் போலச் செயல்படுவதால், காற்றின் திசைக்கேற்ப இந்தத் தீவு நீர் தேக்கத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு நகர்ந்து செல்வதாகவும், கரைகளின் நிழலில் மறையும் போது மறைந்தது போலத் தோன்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 1,761 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட நீர் தேக்கத்தில் மரங்களுடன் மிதந்து வரும் இந்த ராட்சத நிலப்பரப்பு படகுகளில் செல்வோருக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.