Posted in

1,000-ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை: பேரழிவைச் சந்தித்த நேபாளம் சர்வதேச நிவாரணம் கேட்கும் காட்மாண்டு!

இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை உடைப்பு காரணமாக நேபாளத்தில் உருவான கொடூர வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளது உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், 11,800-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அவசரக்கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 2015-ஆம் ஆண்டு நிலநடுக்கத்திற்குப் பிறகு நேபாளம் சந்தித்துள்ள மிக மோசமான இயற்கை பேரழிவாக இது மாறியுள்ளது.
போடேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் பாய்ந்த ராட்சத வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் முக்கியப் பாலங்கள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. தலைநகர் காட்மாண்டுவை இணைக்கும் முக்கியச் நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல உடல்கள் அடையாளங் காண முடியாத நிலையில் உள்ளதால், தற்காலிகப் பொது மயானங்களில் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இப்பாரிய அழிவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சிசிர் கனல் (Shisir Khanal), “நாங்கள் உருவாக்காத உலகளாவிய பருவநிலை மாற்றக் காரணியால், நாங்கள் மிகக் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகிறோம்” எனக் வேதனை தெரிவித்தார். சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடும் தொழில்துறை நாடுகள் இத்தகைய பேரழிவுகளுக்குப் பொறுப்பேற்று இழப்பீடு (Climate Compensation) வழங்க வேண்டும் என அவர் சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் பாதிப்புகளுக்கான ஐ.நா அமைப்பின் இழப்பீட்டு நிதியத்தில் (Loss and Damage Fund) இருந்து உடனடி நிதியுதவி கோரி நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளது. இது பிச்சை அல்ல, எங்களின் உரிமையும் நெறிமுறைச் சார்ந்த பொறுப்பும் ஆகும் எனத் தெரிவித்துள்ள காட்மாண்டு நிர்வாகம், இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவது ஒட்டுமொத்த தெற்காசியாவின் நீர் பாதுகாப்பிற்கே ஆபத்து என்பதால் சர்வதேச சமூகங்கள் உடனடியாக தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.