அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதற்கு எதிராக அதிமுக தாக்கல் செய்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் சபாநாயகரின் தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த காலத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டவுடன் சபாநாயகர் அதனை உடனடியாக ஏற்றுக்கொண்டார். கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்காமல், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டது அரசியல் சாசன கடமைக்கு எதிரானது என்றும், குதிரைப் பேரம் நடந்துள்ளதாகவும் கூறி அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கின் இறுதி விசாரணையின் போது, “எம்.எல்.ஏ-க்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே ராஜினாமா செய்தனர் என்பதை உறுதிப்படுத்திய பிறகே சபாநாயகர் அதனை ஏற்றுக்கொண்டார்; இதில் எவ்வித அரசியலமைப்பு மீறலும் இல்லை” என சபாநாயகர் மற்றும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதேவேளையில், வழக்கில் திடீர் திருப்பமாக, ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் எனக் கூடுதல் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்து நிராகரித்தனர்.
அனைத்து தரப்பு காரசார வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு, முக்கிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. சபாநாயகரின் அதிகாரம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா செல்லுபடித் தன்மை குறித்து நீதிமன்றம் அளிக்கவுள்ள இந்த தீர்ப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.