மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் தலைவர்களுள் ஒருவராகவும் ஜாதவ்பூர் தொகுதி எம்.பி-யாகவும் இருந்த சயோனி கோஷ் (Saayoni Ghosh), திடீரெனத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த சம்பவம் தேசிய மற்றும் மாநில அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மமதா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய இளம் பெண் தலைவராகக் களம் கண்ட சயோனி, சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜக கூட்டணி ஆதரவு நிலைக்கு மாறியதைத் தொடர்ந்து, தற்போது விஜய்யைச் சந்தித்துள்ளது உற்றுநோக்கப்படுகிறது.
திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த சயோனி கோஷ், தனது கூர்மையான பேச்சுகளாலும் பாஜக-வுக்கு எதிரான விமர்சனங்களாலும் இணையத்தில் பிரபலமானவர். ஆனால், அண்மைக்காலமாகத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்த உட்கட்சிப் பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக, அப்பார்ட்டியில் இருந்து வெளியேறிய அதிருப்தி எம்பிக்கள் குழுவில் இணைந்தார். பின்னர் பாஜக கூட்டணி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, தேசிய அளவிலான விவாதங்களில் மத்திய அரசின் மசோதாக்களுக்கு ஆதரவாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்தச் சூழலில், சென்னையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த சயோனி கோஷ், அவருடனான கலந்துரையாடல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். “தமிழ்நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சி (Inclusive Growth), இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் நல்ஆளுமை சார்ந்த முதலமைச்சர் விஜய்யின் தொலைநோக்குப் பார்வை வியக்க வைக்கிறது” என்று புகழாரம் சூட்டியுள்ள அவர், மேற்கு வங்க பண்பாட்டின் மீது விஜய் கொண்டுள்ள அன்பிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாகப் ஆட்சியமைத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் நிர்வாக மாதிரி, தேசிய அளவில் பல மாநில தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி அரசுக்கு எதிராகப் புயலைக் கிளப்பி பாஜக கூட்டணி முகாமிற்குச் சென்ற முன்னணி எம்பி ஒருவர், தென்னகத்தில் புதிய அரசியல் அலையை உருவாக்கியுள்ள விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது, தேசிய அளவில் ஒரு புதிய அரசியல் கூட்டணியோ அல்லது புதிய வியூகமோ உருவாகிறதா என்ற விவாதங்களை அரசியல் விமர்சகர்களிடையே தீவிரப்படுத்தியுள்ளது.