பேங்காக்: மத்திய கிழக்கில் 250 நாட்களுக்கும் மேலாக நீடித்த நீடித்த போர்ப் பணிகளை முடித்துக்கொண்டு கரை திரும்பும் அமெரிக்கக் கடற்படையின் பிரம்மாண்ட விமானந்தாங்கி போர்க்கப்பலான ‘யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln), ஓய்வு மற்றும் மீட்புப் பணிகளுக்காகத் தாய்லாந்தின் பட்டாயா (Pattaya) துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. கப்பலில் உள்ள சுமார் 5,000 அமெரிக்கக் கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகள் பட்டாயா நகரத்திற்குள் வரவுள்ள நிலையில், அங்கு சட்டவிரோத விபச்சாரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தாய்லாந்து காவல் துறை தீவிர அதிரடி சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.
உலகின் முன்னணி இரவு நேர சுற்றுலா நகரங்களில் ஒன்றான பட்டாயாவின் கடற்கரை பகுதிகள் மற்றும் முக்கிய கேளிக்கை தெருக்களில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க வீரர்கள் வருகையை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனைகளில், பொது இடங்களில் சட்டவிரோதமாக வாடிக்கையாளர்களை ஈர்க்க முயன்றதாக தாய்லாந்து, உகாண்டா மற்றும் லாவோஸ் நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பாலினத் தொழிலாளர்களைக் காவல் துறையினர் கைது செய்து அபராதம் விதித்துள்ளனர்.
தாய்லாந்து சட்டப்படி விபச்சாரம் தடை செய்யப்பட்ட ஒன்று என்றாலும், பட்டாயா நகரில் இது பரவலாகக் காணப்படும் சூழலில், அமெரிக்க வீரர்களை இலக்கு வைத்து நடைபெறும் பாலியல் சுரண்டல்கள் மற்றும் நோய்ப் பரவல்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதேவேளையில், 5,000 அமெரிக்க வீரர்களின் இந்த 5 நாள் வருகை மூலம் உள்ளூர் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குச் சுமார் $3 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹25 கோடி) வரை குறுகிய காலப் பொருளாதார வரவு கிடைக்கும் என பட்டாயா நகர மேயர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்கள் போர்க்கப்பலிலேயே முடங்கிக் கிடந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அமெரிக்க வீரர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அவர்கள் குறிப்பிட்ட சிவப்பு விளக்கு பகுதிகள் (Red-Light Zones), கஞ்சா கடைகள் மற்றும் ஆபத்தான நீர் விளையாட்டுப் பகுதிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத விபச்சாரத்திற்கு எதிராகக் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளையில், அமெரிக்க வீரர்களின் வருகையால் பட்டாயாவின் சுற்றுலாப் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என உள்ளூர் வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.