வாஷிங்டன்: சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் இதயப் பகுதியாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மையம் கொண்டு அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளை வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) இலக்குகள் மீது அமெரிக்கப் போர்ப் படைகள் தொடர்ச்சியாக 2-வது நாளாகப் பிரம்மாண்ட மற்றும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேசக் கடல்வழியில் வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக ஈரான் கடல் கண்ணிவெடிகளை அமைக்க முயன்றதற்கும், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியதற்கும் பதிலடியாகவே இத்தகையக் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள் மற்றும் தொடர்பு மையங்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகப் பகரைன், குவைத் மற்றும் ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்புகளை நோக்கி ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தித் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. மேலும், ‘எதிரிக்கு மிகப்பெரிய விலையைக் கொடுப்போம்’ எனக் எச்சரித்துள்ள ஈரான் ராணுவம், ஹார்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை முழுமையாக முடக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வந்த தற்காலிக அமைதி முடிவுக்கு வந்து, மீண்டும் நேரடி மோதல் வெடித்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது. இரு நாடுகளும் பின்வாங்க மறுத்துத் தீவிர ராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்து உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.