Posted in

நெடுஞ்சாலையில் திடீரெனத் தரையிறங்கிய ஹெலிகாப்டர் – ரஷ்யாவில் நடுவானில் எரிபொருள் தீர்ந்து விபத்து!

மாஸ்கோ: ரஷ்யாவின் தூரக் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சகாலின் (Sakhalin) தீவில், ரஷ்ய விமானப் படைக்குச் சொந்தமான ‘Mi-8’ வகை இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நெடுஞ்சாலையில் திடீரென அவசரமாகத் தரையிறங்க முயன்று பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது. தொலைதூரப் பகுதிகளில் நடைபெற்ற முன்கூட்டிய தேர்தல் பணிகளை முடித்துக்கொண்டு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் திகிலூட்டும் முழுச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஹெலிகாப்டர் தங்களின் இலக்கு விமான நிலையத்திற்கு வெறும் 5 கிலோமீட்டர் தொலைவில் பறந்துகொண்டிருந்த போது, அதில் இருந்த எரிபொருள் முற்றிலும் தீர்ந்துபோனதாகக் கூறப்படுகிறது. இதனால் ஹெலிகாப்டரின் இரண்டு என்ஜின்களும் நடுவானிலேயே செயலிழந்து, விமானம் வேகமாக உயரத்தை இழக்கத் தொடங்கியது. உடனடியாகச் சுதாரித்த விமானி, அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் பொருட்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்த பிரதான நெடுஞ்சாலையை அவசரமாகத் தரையிறங்கும் களமாகப் பயன்படுத்தினார்.
நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்றுக்கு மிக அருகில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய போதிலும், சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதாமல் இருக்க விமானி திறம்படச் செயல்பட்டார். இருப்பினும், தரையிறங்கிய வேகத்தில் கட்டுக்கடங்காமல் சென்ற ஹெலிகாப்டர் சாலையோரப் புதர்களில் மோதி, தலைகீழாகப் பள்ளத்தில் சரிந்து நின்றது. இந்த ஹெலிகாப்டரில் 3 பணியாளர்கள், தேர்தல் ஆணைய அதிகாரி மற்றும் 4 தொலைக்காட்சிகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் என மொத்தம் 8 பேர் பயணித்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவிலான காயங்களோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும், லேசான காயங்களுடன் அனைவரும் தப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ராணுவப் பயன்பாட்டில் உள்ள ஹெலிகாப்டரில் நடுவானில் எரிபொருள் தீர்ந்துபோனது எப்படி என்பது குறித்து ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யாவில் நிலவும் விமான எரிபொருள் தட்டுப்பாடே இதற்குக் காரணமா என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.