Posted in

FIFA அமைப்பில் உச்சக்கட்ட மோதல்:தலைவருக்கு எதிரான சதியை முறியடிக்க நீதிமன்றத்தை நாடிய FIFA!

உலகப் கால்பந்து நிர்வாக அமைப்பான ஃபிஃபா (FIFA) மற்றும் ஐரோப்பியக் கால்பந்து சம்மேளனமான யுவேஃபா (UEFA) இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டி, தற்போது பகிரங்கமான சட்டப் போராக மாறியுள்ளது. ஃபிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ (Gianni Infantino) மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடன் யுவேஃபா திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஃபிஃபா வழக்கறிஞர்கள் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர்.

சர்வதேச உலகக்கப்பைப் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்து சுமார் 4.2 பில்லியன் டாலர் ஈட்டத் திட்டமிட்ட ‘ஃபிஃபா ஃபார்வர்ட் எண்டர்பிரைஸ்’ (FFE) திட்டம் உலகளவில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இந்தக் கடும் எதிர்ப்பை அடுத்து அந்தத் திட்டம் கைவிடப்பட்ட போதிலும், இந்த விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரத் தேவையான ஆவணங்களைக் கோரி அமெரிக்காவின் நியூயார்க், புளோரிடா மற்றும் கொலராடோ நீதிமன்றங்களில் யுவேஃபா மனுத் தாக்கல் செய்தது.

யுவேஃபாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ள ஃபிஃபா, “யுவேஃபா சட்டப்பூர்வ நடவடிக்கை என்ற போர்வையில் ஃபிஃபா மற்றும் அதன் தலைவருக்கு எதிராகத் தவறானப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், சுவிட்சர்லாந்தில் இதுவரை எந்தக் குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், இல்லாத ஒரு வழக்குக்காக இரகசிய ஆவணங்களைக் கோருவது ஃபிஃபாவின் வணிக உரிமைகளைப் பாதிக்கும் என்றும் ஃபிஃபா வாதிட்டுள்ளது.

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா தலைவர் தேர்தலில் இன்ஃபான்டினோ மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், அவரை வீழ்த்தவே யுவேஃபா உள்ளிட்ட ஐரோப்பிய அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. உலகக் கால்பந்து நிர்வாகத்தின் உச்சத்தில் உள்ள இரு பெரும் அமைப்புகளுக்கு இடையே வெடித்துள்ள இந்த மோதல், உலகக் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.