Posted in

ராஜபக்ச குடும்பத்திற்கு புதிய சிக்கல்… நாமல் கைது செய்யப்பட்ட பின்னணி என்ன?

இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இதையேற்று இன்று காலை 9 மணி அளவில் கொழும்பில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஆஜரான அவரிடம், அதிகாரிகள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நீண்ட விசாரணையின் முடிவிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எதிர்வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் நடத்தப்படவிருந்த பிரம்மாண்ட பேரணியை எதிர்கொள்ள அஞ்சியே, தற்போதைய அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன்னைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். இருப்பினும், சர்வதேச அளவிலான நிதி முறைகேடு மற்றும் விமானக் கொள்வனவில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான சட்டப்பூர்வ விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது.

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய அரசியல் முகமாகத் திகழும் நாமல் ராஜபக்சவின் இந்தத் திடீர் கைது நடவடிக்கை, இலங்கை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, கொழும்பு நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுப் பலத்த காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.