ஆப்பிரிக்க கண்டத்திற்கு அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான கேப் வெர்டேவின் (Cape Verde) போகோ (Fogo) தீவில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி (சுமார் 30 மீட்டர்) ஆழமுள்ள பாறைப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சனிக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 21 உயர்மட்டப் பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போகோ தீவில் உள்ள சாவோ பிலிப் (São Filipe) நகராட்சியின் மலைப் பாதையில், குரால் கிராண்டே மற்றும் பொன்டா வெர்டே பகுதிகளைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்களைச் சுமந்துகொண்டு அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. மலையிடுக்குச் வளைவில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு 100 அடி ஆழமான பாறைப் பள்ளத்திற்குள் உருண்டு நொறுங்கியது. இதில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்தச் சுற்றுலாப் பயணம் பள்ளி நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல என்றும், மாணவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஓட்டுநரே தனது சொந்த முயற்சியில் ஆண்டுதோறும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யும் தனியார் சுற்றுலா என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். விபத்து நடந்த இடம் மிகவும் கரடுமுரடான பாறைகளைக் கொண்ட பகுதி என்பதால், மீட்புக் குழுவினர் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்டுச் சாவோ பிரான்சிஸ்கோ டி அசிசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள கேப் வெர்டே நாட்டின் அதிபர் ஜோஸ் மரியா நெவஸ், “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; இது விவரிக்க முடியாத பெரும் சோகம்” எனப் பதிவிட்டுள்ளார். பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நடந்ததா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்து அந்நாட்டு அரசு மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.