Posted in

இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மறைக்கப்பட்ட உண்மைகளுக்கும் சர்வதேச அளவில் பொறுப்புக்கூறலையும் நீதியையும் வலியுறுத்தி, பிரித்தானியத் தமிழர்கள் லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரைம்ரோஸ் ஹில் (Primrose Hill) பகுதியில் திரண்டு பிரம்மாண்ட கவனயீர்ப்பு விழிப்புணர்வுப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளில் ஒன்றான செம்மணி புதைகுழியில் தோண்டி எடுக்கப்பட்ட 583 மனித எச்சங்களை அடையாளப்படுத்தும் விதமாக, நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் வெள்ளைத் துணிகளால் தங்களை மூடிப் படுத்து இறந்த உடல்கள் போல் காட்சி அளித்தனர்.

செம்மணியில் புதைக்கப்பட்டிருந்த உடல்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிகோலிய 18 வயது தமிழ் மாணவியான கிருஷாந்தி குமாரசாமியின் கூட்டு வன்புணர்வு மற்றும் படுகொலையை அடையாளப்படுத்தும் வகையில், இரத்தக் கறையுடனான பிரமாண்டமான வெள்ளைச் சீருடையைச் சுற்றி இவர்கள் இறந்த உடலங்களைப் போல் இருந்தனர்.

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட 583 மனித எச்சங்களை உலகிற்கு அடையாளப்படுத்தும் வகையில், போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெள்ளைத் துணிகளால் தங்களைப் போர்த்திக் கொண்டு தரையில் உடல்கள் போல் படுத்துப் போராட்டம் நடத்தினர். 1996-ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தினரால் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் மரணமே இந்த மனிதப் புதைகுழிகள் வெளிவரக் காரணமாக அமைந்தது. அதனைச் சுட்டிக்காட்டும் விதமாக, இரத்தக்கறையுடன் கூடிய பிரம்மாண்ட பாடசாலை வெள்ளைச் சீருடையைச் சுற்றி இவர்கள் பலியான உடல்கள் போலக் காட்சிளித்தது காண்போரைக் கண் கலங்க வைத்தது.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகச் சர்வதேச அரங்கில் கட்டமைக்கப்பட்டு வரும் இலங்கையின் பிம்பத்திற்குச் சவால் விடும் வகையில், அந்த வழியாகச் சென்ற மேலைநாட்டுப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அஞ்சலட்டைகள் வழங்கிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரித்தானியத் தமிழர் கூட்டமைப்பு மற்றும் PEARL அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), உலகத் தமிழர் வரலாற்றுச் சங்கம், தமிழ் சொலிடாரிட்டி உள்ளிட்ட பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

PEARL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி மதுரா ராசரத்தினம், Tamil Guardian பத்திரிகைக்குத் தெரிவிக்கையில், “இப்போது, மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், புதைகுழிகள் இறுதியாக தோண்டப்பட்டு வருவதுடன், இதுவரை சுமார் 600 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், இந்த மனிதப் புதைகுழியைத் தமிழர்கள் மறந்துவிடவில்லை என்பதையும், உண்மை புதைக்கப்பட்டுவிடவில்லை என்பதையும் காட்டுவதற்காகவுமே லண்டனில் உள்ள Primrose Hillல் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக “விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது,என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

செம்மணி மனிதப் புதைகுழி

செம்மணி மனிதப் புதைகுழியானது, 1990களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருந்த காலத்தில் இடம்பெற்ற தமிழர்களின் பரவலான காணாமல் ஆக்கப்படுதல்களுடன் தொடர்புடையதாகும்.

காணாமல் போன 300 தொடக்கம் 400 தமிழர்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டிருப்பதாக இலங்கை இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ 1998 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோதே, இந்த இடம் முதன்முதலில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தது. எனினும், அது ஒரு விரிவான விசாரணைக்கு வழிவகுக்கவில்லை. மாறாக, விசாரணைகளும் அகழ்வாராய்ச்சிகளும் அதிகாரத்துவ தடைகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டு, உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகள் பல தசாப்தங்களாக முடங்கிக் கிடந்தன.

தமிழ் மாணவியான கிருஷாந்தி குமாரசாமியின் கூட்டு வன்புணர்வு மற்றும் படுகொலை தொடர்பான விசாரணையின் போதே ராஜபக்ஷ இந்த உண்மையை வெளிப்படுத்தினார். 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் 7 ஆம் திகதி, யாழ்ப்பாணம் கைதடி சோதனைச் சாவடிக்கு அருகே சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் கிருஷாந்தி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

18 வயதான கிருஷாந்தி, சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் தனது உயர்தரப் பரீட்சைகளை அண்மையில் நிறைவு செய்திருந்ததுடன், ஒரு மருத்துவராக வர வேண்டும் என்றும் விரும்பினார். அவர் தினசரி பாடசாலைக்குச் செல்லும் பாதை கைதடி இராணுவ சோதனைச் சாவடியைக் கடந்து செல்வதாகவே அமைந்திருந்தது.

அவர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச் சென்ற அவரது தாய், இளைய சகோதரன் மற்றும் அயலவர் ஆகியோரும் கொல்லப்பட்டு, கிருஷாந்தியின் உடலுக்கு அருகிலேயே ஒரு குழியில் புதைக்கப்பட்டனர்.

இக்கொலைகள் தொடர்பான கொந்தளிப்பு பல சிறிலங்கா இராணுவ சிப்பாய்களின் கைதுக்கும் விசாரணைக்கும் வழிவகுத்தது. 1998 ஜூலையில், ராஜபக்ஷ உட்பட ஐந்து சிப்பாய்கள், கிருஷாந்தியின் வன்புணர்வு மற்றும் படுகொலை, மற்றும் அவரது தாய், சகோதரன், அயலவர் ஆகியோரின் கொலைகள் தொடர்பில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர். இந்த விசாரணைகளின் போதுதான் நூற்றுக்கணக்கான உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டிருப்பதாக ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.

கிருஷாந்தியின் படுகொலை நடந்து முப்பது ஆண்டுகளின் பின்னரும், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியங்களின் சாட்சியங்களை செம்மணி மனிதப் புதைகுழி தொடர்ந்து வழங்கி வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 63 ஆவது கூட்டத்தொடர் தொடங்கும் அதேவேளையில் இந்த நினைவு தினமும் வந்துள்ளது; இக்கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைப் பதிவுகள் மீண்டும் ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

செம்மணி விவகாரம், பரவலாகத் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, மற்றும் முள்ளிவாய்க்கால் உட்பட போரின் போது இழைக்கப்பட்ட பாரிய அட்டூழியங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணையை உறுதி செய்யுமாறு தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் உள்ள தமிழர்கள் சர்வதேச சமூகத்திற்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

Primrose Hillல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தெளிவுபடுத்தியது போல, செம்மணி தொடர்பான உண்மை மற்றும் நீதிக்கான பிரச்சாரம், கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட மண்ணைத் தாண்டி வெகுதூரம் விரிவடைந்துள்ளது. கிருஷாந்தியின் படுகொலையிலிருந்து முப்பது வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இன்னும் தோண்டி எடுக்கப்படும் உடல்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு காரணமானவர்கள் தொடர்பில் பதில்களைத் தொடர்ந்தும் கோருவோம் என பிரித்தானியத் தமிழர்கள் கூறுகின்றனர்.