Posted in

உதயநிதியின் இரட்டை அர்த்த பேச்சுகளுக்குச் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

“அரசியல் விமர்சனங்கள் எவ்வளவோ கடுமையாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் பெண்களைப் பற்றி இரட்டை அர்த்தத்திலோ, அவதூறாகவோ பேசினால் சட்டம் தன் கடமையை மிகக் கடுமையாகச் செய்யும்” எனத் தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் எச்சரித்துள்ளார். நடிகை த்ரிஷாவைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த பெரும் சர்ச்சைக்கு இடையே, பேரவையில் முதல்வர் விஜய் ஆற்றிய இந்த உரை அரசியல் களத்தில் சூட்டை உயர்த்தியுள்ளது.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், உதயநிதி ஸ்டாலின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவரது சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குப் பதிலடி கொடுத்தார். “பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை அனைவரும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். அரசியல் களம் என்பதற்காக நமது வீட்டுப் பெண்களையோ அல்லது மற்ற பெண்களையோ மிகக் கேவலமாக இழிவுபடுத்திப் பேசுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், “சமீபகாலமாகத் தமிழகத்தில் வன்ம நதியும் ஆபாச நதியும் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடுவது போன்றதொரு சூழல் நிலவுகிறது; மக்கள் அனைத்தையும் நேரலையில் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரட்டை அர்த்த வசனங்களைப் பேசித் தப்பிக்கப் பார்ப்பவர்கள் ஒன்று நினைவில் கொள்ள வேண்டும்; நம் அனைவரது வீடுகளிலும் தாய்மார்களும் சகோதரிகளும் இருக்கிறார்கள். பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தினால் இந்த அரசு அமைதியாக இருக்காது” எனக் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரிப் போராட்டத்தின் போது தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை முழக்கமிட்ட போது, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையானதுடன், அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் தனது மௌனத்தை உடைத்து சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் விஜய் அளித்த இந்த எச்சரிக்கை, எதிர்க்கட்சியான திமுகவிற்குத் தவெக அரசு கொடுத்துள்ள கடுமையான அரசியல் பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.