Posted in

ஈரானின் 5 தங் கலன்கள் அமெரிக்கப் படையால் தகர்ப்பு | ‘கார்க்’ தீவு அருகே பதற்றம் : திருப்பி அடித்த ஈரானியப் படைகள்!

மத்திய கிழக்கில் அமெரிக்கப் போர்க்கப்பலை இலக்கு வைத்து ஈரான் இருமுறை பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முயன்றதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாகக் ‘கார்க் தீவு’ (Kharg Island) மற்றும் ஓமன் வளைகுடாப் பகுதிகளில் இருந்த ஈரானின் 5 கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கப் படைகள் ஏவுகணைகளை வீசித் தகர்த்துள்ளன.

அமெரிக்க மத்திய கட்டளை மையமான ‘சென்ட்காம்’ (CENTCOM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) எங்களது போர்க்கப்பல்களை நோக்கி ஏவுகணைகளை வீசித் தாக்க முயன்றது. அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அந்தத் தாக்குதல்களில் இருந்து தப்பிவிட்ட போதிலும், இதற்குப் பதிலடியாக ஈரானிய சட்டவிரோத எண்ணெய் கடத்தல் நெட்வொர்க்கிற்குச் சொந்தமான ‘M/T Derya’ உட்பட 5 பெரிய டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி அவை இயங்க முடியாதபடி அழிக்கப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன் கப்பல் பணியாளர்களை வெளியேறுமாறு எச்சரித்ததாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு ஈரான் உடனடியாகத் தனது பழிவாங்கும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்காவின் ‘அல் அஸ்ராக்’ (Al Azraq) விமானப் படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மழை பொழிந்தது. இதில் பெரும்பாலான ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்டான் தெரிவித்த போதிலும், அமெரிக்கப் போர் விமானங்களின் தங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாக ஈரான் படைகள் உரிமை கோரியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களில் நிற்கும் எண்ணெய் கப்பல்களில் உள்ள பணியாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் அனைத்துக் கப்பல்களும் குறிவைத்துத் தாக்கப்படும் என்றும் ஈரான் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹொர்முஸ் நீரிணைப் பகுதியில் இரு நாடுகளும் மாறி மாறி நடத்தி வரும் இந்த நேரடித் தாக்குதல்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 டாலரை நெருங்கிப் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.